/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி
ADDED : ஆக 21, 2025 01:21 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தார்ப்பாய் அல்லது துணிவலை மூடாமல் செல்லும் குப்பை லாரிகளில் இருந்து பறக்கும் குப்பைகளால், பிற வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது.
குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகள், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன.
லாரியில் குப்பையை ஏற்றிச் செல்லும் போது, அவை காற்றில் பறக்காமல் இருக்க, தார்ப்பாய் அல்லது துணிவலை வாயிலாக லாரியை முழுமையாக மூட வேண்டும்.
ஆனால், இதை பின்பற்றாமல், அதிகமாக குப்பையை ஏற்றிக் கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
இதனால், வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து, குப்பை காற்றில் பறந்து சாலையில் விழுகிறது.
மேலும் சாலையில் நிற்கும்போது, குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், பிற வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது.
எனவே, குப்பையை, தார்ப்பாய் வாயிலாக முழுமையாக மூடி எடுத்துச் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.