/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு...சுழற்சி முறையில்!:தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
/
போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு...சுழற்சி முறையில்!:தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு...சுழற்சி முறையில்!:தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு...சுழற்சி முறையில்!:தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : ஏப் 12, 2024 10:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்கள் 216 பேர் மற்றும் போலீசார் 670 பேருக்கான சுழற்சி முறை தேர்வு நேற்று நடந்தது. ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்வது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல தேவையான வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 1,417 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை.
இந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு ஊழியர்கள், போலீசார், மத்திய அரசின் ஊழியர்கள் என, அனைவருமே கணினி மூலம் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறை தேர்வுக்கு பின்னரே நியமிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு, சுழற்சி முறை தேர்வு மூலம், எந்த ஊழியர், எந்த ஓட்டுச்சாவடியில் பணியாற்ற போகிறார் என கணிக்க முடியாது. அவற்றை முன்கூட்டியே திட்டமிடவும் முடியாது. இதன் காரணமாக, சுழற்சி முறை தேர்வு நடக்கிறது.
ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள போலீஸ் மற்றும் மத்திய அரசின் நுண் பார்வையாளர்களுக்கான கணினி சுழற்சி முறை தேர்வு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் பொது பார்வையாளர் பூபேந்திரசவுத்ரி தலைமையில், போலீஸ் பார்வையாளர் பரத்ரெட்டி, கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில் நேற்று நடந்தது.
நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 216 பேர் மத்திய அரசின் ஊழியர்கள். தேர்தலன்று, பதற்றமான 178 ஓட்டுச்சாவடிகளிலும், இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். நுண் பார்வையாளர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பொது பார்வையாளர் பூபேந்திரசவுத்ரி கீழ் பணியாற்றுவார்கள். இவர்களுக்கான தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
ஓட்டுச்சாவடி பணியாற்றும் நுண் பார்வையாளர்கள், அங்கு நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பர். அப்போது, தேர்தல் விதிமீறல் ஏதாவது நடைபெற்றால், பொது பார்வையாளருக்கு அறிக்கை வழங்குவர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவுகூட நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலன்று மட்டுமல்லாமல், ஓட்டு எண்ணிக்கையின்போதும், ஒவ்வொரு மேஜையிலும் நுண் பார்வையாளர்கள் அமர்வார்கள். நுண் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தேர்தலிலும் நுண் பார்வையாளரின் பங்கு முக்கிமானதாகும்.
சுழற்சி முறையில் தேர்வு போலீசாரும் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்த ஓட்டுச்சாவடியில், எந்த போலீசார் பணியாற்ற உள்ளனர் என்பது இந்த சுழற்சி முறை தேர்வு மூலம் தெரியவரும். அதன் அடிப்படையிலேயே பணி ஆணைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்.பி., சண்முகம் தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 22 போலீஸ் ஆய்வாளர்கள், 170 உதவி ஆய்வாளர்கள், 670 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இப்பணிகள் முடிந்த பின், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்வது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல தேவையான வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

