/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!:5 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
/
காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!:5 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!:5 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!:5 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஏப் 03, 2024 12:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்.பி., தலைமையில், 670 போலீசார் மற்றும் 350 மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என, 1,020 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்ட எல்லைகளில், 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில், எஸ்.பி., சண்முகம் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
32 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,417 ஓட்டுச்சாவடிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சென்னை சிட்டி போலீசுக்கான பகுதிகள் போக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 380 இடங்களில், 773 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தலுக்காகவே தனி பிரிவு ஒன்று துவங்கி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் சேர்ந்து, காஞ்சிபுரத்தில், வாக்காளர்களின் கவனத்திற்காக கொடி அணிவகுப்பு நடத்திய நிலையில், தேர்தலுக்கான சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் போலீசார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடிகளின் பட்டியலில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அடையாளம் கண்டு, 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் பிரச்னைக்குரிய நபர்களை அடையாளம் கண்டு, 69 பேரிடம், 'தேர்தல் சமயத்தில் எந்த வகையிலும் பிரச்னை செய்ய மாட்டேன்' என போலீசார் எழுதி வாங்கியுள்ளனர்.
தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டுள்ளனர்.
பதிவேடுகள் பராமரிப்பு
அதன்படி, எஸ்.பி., சண்முகம் தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 22 போலீஸ் ஆய்வாளர்கள், 170 உதவி ஆய்வாளர்கள், 670 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என, 370 பேரும், 5 கம்பெனிகளைச் சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர், தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பணியில் இருப்பார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றிலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஐந்து மாவட்டங்கள் உள்ளன.
ஐந்து மாவட்ட எல்லைகளில், 11 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
போதைப்பொருட்கள் நடமாட்டம், தேர்தலுக்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வது ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., சண்முகம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று தேர்தல்களின் விபரங்களை பார்க்கும்போது, பெரிய அளவில் தேர்தல் சம்பந்தமான பிரச்னைகள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் சரியாக திட்டமிடப்பட்டுள்ளன.
சுழற்சி முறை
பரந்துாரிலும், ஆர்.என்.கண்டிகை கிராமத்திலும் உள்ள தேர்தல் புறக்கணிப்பு பிரச்னையை சரி செய்வோம். அதேபோல, போலீசில் எத்தனை பேர் தபால் ஓட்டு போட உள்ளனர் என்பது, 10ம் தேதிக்கு பின் தெரியவரும்.
எந்த ஓட்டுச்சாவடியில் எந்த போலீஸ் பணிபுரிய போகிறார்கள் என்பது, சுழற்சி முறை தேர்வுக்கு பின் தெரியவரும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, தொகுதிக்குள்ளேயே ஓட்டு மற்றும் தேர்தல் பணியும் இருந்தால், அவர் பணியாற்றும் ஓட்டுச்சாவடியிலேயே தேர்தலன்று ஓட்டளிக்கலாம்.
ஆனால், காஞ்சிபுரம் தொகுதியில் ஓட்டு இருக்கும்பட்சத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தலன்று பணியாற்றும் போலீசார், முன்னதாக தபால் ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

