/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கணினி பட்டா இல்லாததால் நிலங்களை விற்பதில்.. புது சிக்கல் கிராம நத்தம் காலி மனைகளுக்கு திடீர் கட்டுப்பாடு
/
கணினி பட்டா இல்லாததால் நிலங்களை விற்பதில்.. புது சிக்கல் கிராம நத்தம் காலி மனைகளுக்கு திடீர் கட்டுப்பாடு
கணினி பட்டா இல்லாததால் நிலங்களை விற்பதில்.. புது சிக்கல் கிராம நத்தம் காலி மனைகளுக்கு திடீர் கட்டுப்பாடு
கணினி பட்டா இல்லாததால் நிலங்களை விற்பதில்.. புது சிக்கல் கிராம நத்தம் காலி மனைகளுக்கு திடீர் கட்டுப்பாடு
ADDED : நவ 26, 2025 11:45 PM

காஞ்சிபுரம்: கணினி பட்டா இல்லாததால், கிராம நத்தம் வீட்டுமனைகளை விற்கவும், அடமானம் வைக்கவும் முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர். புல எண் உட்பிரிவு பிரித்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என பத்திரப்பதிவு துறையும், காலி மனையில் வீடு கட்டிய பின் கணினி பட்டா பெறலாம் என வருவாய் துறையும் தெரிவிக்கிறது. இதில் உள்ள குழப்பங்களை, அரசு தீர்க்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாமல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் இணை எண் - 1, இணை எண் - 2, இணை எண் - 4 ஆகிய ஐந்து பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தவிர, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம், உத்திரமேரூர் ஆகிய நான்கு பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நிர்வாக வசதிக்காக, பத்திரப்பதிவு மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தாமல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் இணை எண் - 1, இணை எண் - 2, இணை எண் - 4 ஆகியவை, காஞ்சிபுரத்தில் வருகின்றன. மற்றவை செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் வருகின்றன.
கிராம மக்களின் ஆவணங்களை கிரைய பதிவு, பரிவர்த்தனை, சுத்ததானம், குத்தகை, அடமானம், தானசெட்டில்மென்ட், தனி அதிகார ஆவணம் உட்பட ஆவணங்கள் பதிவு செய்தல் மற்றும் பிறப்பு - இறப்பு சான்று வழங்குதல், இந்து திருமண பதிவு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தலா, 9,000 ஆவணங்கள் முதல் 12,000 ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இதில் தற்போது, கிராம நத்தம் காலி மனைக்கு பத்திரப்பதிவு செய்ய முடியாமல், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 750க்கும் மேற்பட்ட காலி கிராம நத்தம் நிலங்களை விற்பனை செய்வும், அடமானம் வைக்கவும் முடியாமல், நில உரிமையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முகவர் நல சங்க காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கிராம நத்தம் நிலத்திற்கு நேரடியாகவே பட்டா வழங்கப்பட்டது. அந்நிலத்தை வாங்கியவர், பலருக்கு கைமாற்றி இருப்பர்.
அந்நிலத்தை தற்போது வைத்துள்ளவர், அவசர தேவைக்கு விற்கவோ, வங்கிகளில் அடமானம் வைக்கவோ முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதாவது, நேரடியாக வழங்கப்பட்டு வந்த பட்டா தற்போது, கணினி வாயிலாக இ - பட்டாவாக வழங்கப்படுகிறது. நேரடியாக வாங்கிய நிலத்திற்கு, கிராமங்களில் இருப்போர் கணினி பட்டா வாங்காததால், அவற்றை மற்றவருக்கு விற்கவோ, வங்கிகளின் அடமானம் வைக்கவோ முடியவில்லை.
பத்திரப்பதிவு அலுவலகங்களில், அந்நிலத்தை பதிவு செய்ய முடியவில்லை. அத்துறையினரை கேட்டால் வருவாய் துறையினரிடம் கேட்க சொல்கின்றனர்.
வருவாய் துறையினரை கேட்டால், 'வீடு இருந்தால் பட்டா வழங்குவோம். காலி இடமாக இருந்தாலம் விற்க முடியாது' என்கின்றனர். ஒரே குழப்பமாக இருப்பதால், நிலம் வைத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிராம நிர்வாக பதிவேட்டில், கிராம நத்தம் காலி மனையாக பதிவு செய்திருந்தால், அதற்கு பட்டா வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டிய பின், அரசு பட்டா பெறலாம்' என்கிறார்.
பத்திரப்பதிவு துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கிராம நத்தம் நிலத்தை பத்திரப்பதிவு செய்யும் போது, கட்டாயமாக புல எண் உட்பிரிவு கேட்கிறது. அந்த எண் இல்லை என்றால், பதிவு செய்ய முடியாது. இது, விற்பனைக்கு மட்டும் இல்லை. அடமானம் உள்ளிட்ட ஆவணங்களுக்கு பொருந்தும். கணினி பட்டாவுடன் கிராம நத்தம் பதிவு செய்யலாம்' என்கிறார்.

