/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மீண்டும் களம் காணும் தி.மு.க., 6ல் 5 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால் சாதகம்
/
காஞ்சியில் மீண்டும் களம் காணும் தி.மு.க., 6ல் 5 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால் சாதகம்
காஞ்சியில் மீண்டும் களம் காணும் தி.மு.க., 6ல் 5 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால் சாதகம்
காஞ்சியில் மீண்டும் களம் காணும் தி.மு.க., 6ல் 5 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால் சாதகம்
ADDED : மார் 19, 2024 03:26 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், இம்முறையும் தி.மு.க.,வே போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 6 தொகுதியில், 5ல் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாலும், காங்., கட்சிக்கு ஓட்டு சதவீதம் குறைவாக இருப்பதாலும் மீண்டும் தி.மு.க.,வே களம் காண்கிறது.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., போட்டியிடும் 21 தொகுதி விபரங்களை தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் (தனி), தொகுதியில், இம்முறையும் தி.மு.க.,வே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.
அதேசமயம், காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் எனவும், காங்கிரஸ் போட்டியிட்டால், முன்னாள் எம்.பி.,விஸ்வநாதன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டால், 'நானே போட்டியிட விருப்பம் உள்ளது' என, முன்னாள் எம்,பி.,விஸ்வநாதன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வே நேரடியாக களம் காண்கிறது.
செங்கல்பட்டு தொகுதியாக இருந்த இத்தொகுதி, கடந்த 2009ல், காஞ்சிபுரம் தொகுதியாக உருவானது. அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
அதையடுத்து, 2014ல், தி.மு.க., போட்டியிட்டது. அப்போது தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதத்திடம் தோற்றார்.
இதையடுத்து, 2019ல், மீண்டும் தி.மு.க., சார்பில், செல்வமே போட்டியிட்டார். இதில், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதத்தை காட்டிலும், கூடுதல் ஓட்டு பெற்று, வெற்றி பெற்றார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில், மீண்டும் தி.மு.க., போட்டியிடுவதால், தி.மு.க., வினர், பிரசாரத்துக்கு தயாராகி வருகின்றனர். காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க.,வே தொடர்ந்து போட்டியிடுவதற்கான காரணங்கள் குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் கடந்த இரு தேர்தலில், தொடர்ந்து வெற்றி பெற்று பதவியில் உள்ளனர்.
திருப்போரூர் மற்றும் செய்யூர் ஆகிய தொகுதிகள், கூட்டணி கட்சியான வி.சி., - எம்.எல்.ஏ.,க்களிடம் உள்ளது. மதுராந்தகம் மட்டுமே, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,விடம் உள்ளது.
மொத்தமுள்ள, ஆறு தொகுதிகளில், 5 தொகுதிகள் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியிடம் இருப்பது சாதகமான சூழலாக உள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு போதிய ஓட்டு சதவீதம் இத்தொகுதியில் இல்லை. கடந்த 2014ல், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு, 30,000 ஓட்டுகளே கிடைத்தன. இம்முறை வெற்றி பெற வேண்டுமானால், 8 லட்சம் ஓட்டுகளாவது பெற வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், இத்தனை லட்சம் ஓட்டுகள் பெறுவது சந்தேகம். அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். பா.ஜ., மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களை களம் இறக்குவார்கள் என்பதால், ஓட்டு பிரியும்.
எனவே, காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்து, தி.மு.க.,வே இத்தொகுதியில் மீண்டும் களம் காண்கிறது. ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டங்களிலும், காஞ்சிபுரம் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். நிர்வாகிகள் விருப்பத்துக்கு ஏற்ப, அறிவிப்பு வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

