/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்! ஒப்பந்தம் விடாததால் விவசாயிகள் அதிருப்தி
/
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்! ஒப்பந்தம் விடாததால் விவசாயிகள் அதிருப்தி
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்! ஒப்பந்தம் விடாததால் விவசாயிகள் அதிருப்தி
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்! ஒப்பந்தம் விடாததால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஏப் 22, 2024 04:25 AM

காஞ்சிபுரம், : நுகர்பொருள் வாணிப கழகத்தில், நடப்பாண்டிற்குரிய தொழிலாளர்கள் ஒப்பந்தம் விடாததால், கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. கோடை மழைக்கு நெல் மூட்டைகள் நனையும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில், சம்பா பருவத்தில், 32,110 ஏக்கர் மற்றும் நவரை பருவத்தில், 51,870 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
மே மாதம் அறுவடை
சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை முடிந்துள்ளது. நவரை பருவத்தில், சாகுபடி செய்த நெல், மே மாதம் அறுவடைக்கு வரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக, ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு, 23.60 ரூபாய். ஒரு கிலோ குண்டு ரக நெல்லுக்கு, 23.10 ரூபாய் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா, நவரை பருவத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 70 இடங்களில் அரசு நேரடி கொள் முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
இதில், 37 நேரடி கொள்முதல் நிலையங்கள், நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டிலும், 33 தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
டெண்டர்
இதில், நெல்லை துாற்றி தரம் பிரிக்கவும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி, நெல் சேமிப்பு நிலையத்தில் இறக்குமதி செய்யும் பணி, ரயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெல் மூட்டைகளை எடுத்து செல்வதற்கும், ஆண்டுதோறும் தொழிலாளர் ஒப்பந்தம் விடுவது வழக்கம்.
நடப்பாண்டிற்குரிய ஒப்பந்தம், நுகர்பொருள் வாணிப கழகத்தில், முறையாக டெண்டர் அறிவித்து விடவில்லை. அதற்கு பதிலாக, நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளே செய்து கொள்ளலாம் என, விட்டு விட்டனர்.
மழையில் நனையும் அபாயம்
இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக, பரந்துார், காரை, இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கோடை மழை பெய்தால் திறந்தவெளியில், அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளன.
எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, நெல் மூட்டைகளை தேங்காதவாறு சேமிப்பு நிலையத்தில் சேர்க்கவும், விவசாய பிரதிநிதிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தேங்கவில்லை
இதுகுறித்து, காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலால், நடப்பாண்டிற்குரிய தொழிலாளர் ஒப்பந்தம் விடவில்லை. இருப்பினும், கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேங்காதவாறு, உடனுக்குடன் அவற்றை அனுப்பி வருகிறோம்.
கோடை மழை பெய்வதற்கு முன், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்தும், நெல் மூட்டைகளை சேமிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

