ADDED : ஜன 14, 2025 12:33 AM

காஞ்சிபுரம், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று துவங்குகிறது. இதில், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுதினம் காணும் பொங்கல் என, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, காஞ்சிபுரத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரி லாரியாக கரும்பும், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து, கொத்து மஞ்சளும் வரவழைக்கப்பட்டு, நேற்று விற்பனை களைகட்டியது.
இதில், மொத்த விலையில், 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கும், சில்லறை விலையில் ஒரு கரும்பு 40- - 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. கொத்து மஞ்சள் ஒரு செடி 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, பூஜைக்கு தேவையான பூக்களின்தேவை அதிகரித்ததால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது. குறிப்பாக, மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை உயர்ந்தாலும், பூ வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தை சேர்ந்த மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர் முனுசாமி கூறியதாவது:
தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மார்கழி மாத பனிப்பொழிவால், மல்லிகைப்பூ விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. அதனால், மல்லிகைப்பூ உள்ளிட்ட பிற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

