/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் ரூ.667 கோடி! கடந்தாண்டைவிட ரூ.90 கோடி அதிகம்
/
மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் ரூ.667 கோடி! கடந்தாண்டைவிட ரூ.90 கோடி அதிகம்
மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் ரூ.667 கோடி! கடந்தாண்டைவிட ரூ.90 கோடி அதிகம்
மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் ரூ.667 கோடி! கடந்தாண்டைவிட ரூ.90 கோடி அதிகம்
ADDED : பிப் 19, 2024 05:44 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியின், 2024- - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், 667 கோடி ரூபாய்க்கு இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்தாண்டைவிட, 90 கோடி ரூபாய் கூடுதலாக பட்ஜெட் தாக்கலாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில், இன்று நடைபெற உள்ளது. இதில், மாநகராட்சியின் 2024- - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு முன்னறிவிப்பு இன்றி, மாநகராட்சி கூட்டத்தில் திடீரென, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், 51 வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகம் இப்போது முன் கூட்டியே பட்ஜெட் விபரங்களை வழங்கியுள்ளது.
அதன்படி, ஏப்ரலில் துவங்க உள்ள புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 666 கோடியே, 91 லட்சத்து, 33,000 ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், 667 கோடியே, 77 லட்சத்து, 76,000 ரூபாய் செலவாகும் எனவும், உத்தேச மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், 1 கோடியே, 5 லட்சம் ரூபாய் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, 577 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை காட்டிலும், 90 கோடி ரூபாய் கூடுதலாக இந்தாண்டு பட்ஜெட் தாக்கலாகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை, வருவாய் பிரிவு நிதி, குடிநீருக்கான நிதி, கல்வி நிதி ஆகிய மூன்று வகையான நிதியின் வாயிலாக, பொதுப்பிரிவு, பொறியியல், வருவாய், சுகாதாரம், நகரமைப்பு ஆகிய பிரிவுகள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இயங்கி வருகிறது.
நகரவாசிகளிடம் வசூலிக்கப்படும் வரி மூலம், வருவாய் பிரிவுக்கு, 322.3 கோடி ரூபாய் வருவாய் எனவும், அதற்கு நிகராக 322.9 கோடி ரூபாய் செலவினமாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, குடிநீர் திட்டங்களுக்கு 340.3 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், 340.7 கோடி ரூபாய் செலவினமாகும் எனவும் கணக்கிடப்பட்டள்ளது.
கல்வி நிதியை பொறுத்தவரை 4.21 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், 4.0 கோடி ரூபாய் செலவினமாகும் எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று வகையான நிதியை கொண்டு, பொறியியல் துறை, பொது பிரிவு, சுகாதாரம், நகரமைப்பு போன்ற துறைகள் மாநகராட்சியில் இயங்கி வருகிறது.
ஏப்ரல் மாதம் துவங்கும் நிதியாண்டில், 667 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டதில், இதில் பெரும் தொகை பொறியியல் துறைக்கே செலவிடப்படும். அதாவது, 606 கோடி ரூபாய் பொறியியல் துறைக்கே செலவிடப்படும்.
இதில், சாலை, மின்விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைப்பது, வாகனங்கள் இயக்குதல், என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய பணிகள் மேற்கொள்வதும், சீரமைப்பு, பராமரிப்பு போன்றவை இந்த நிதியில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பட்ஜெட்டில், பெரும் தொகை, பொறியியல் துறைக்கு செலவிடப்படுகிறது.
அடுத்தபடியாக, மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு, 37 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கொசு மருந்து அடிப்பது, தற்காலிக பணியாளர்கள் சம்பளம், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள் வாங்குவது, வாகனங்கள் பராமரிப்பு, நாய்கள் பெருக்கம் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகள் இந்த நிதியில் செலவிடப்படுகிறது.
சுகாதார பிரிவுக்கு அடுத்தபடியாக, பொதுப்பிரிவுக்கு 19 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில், ஊழியர்களுக்கான சம்பளம், போனஸ், விளம்பரம், போக்குவரத்து, தேர்தல் செலவு, ஊழியர்களுக்கான காப்பீடு போன்ற செலவினங்கள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநகராட்சி பட்ஜெட் குறித்து, மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, 'கடந்தாண்டு போல இந்தாண்டும் பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகின்றன.
'புதிய விஷயமாக, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும், மாநகராட்சிக்கு தேவையான வாகனங்கள் வாங்குவது போன்றவை இந்த பட்ஜெட்டில் புதிதாக சேர்த்துள்ளோம். மற்றபடி வழக்கமான விபரங்கள் அதில் இடம் பெற்று உள்ளன' என்றார்.

