/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சியினர்!
/
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சியினர்!
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சியினர்!
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சியினர்!
ADDED : மார் 30, 2024 09:14 PM
மாமல்லபுரம்:காஞ்சிபுரம் - தனி லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி என, ஆறு தொகுதிகள் அடங்கியுள்ளன.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின்போது, மொத்தம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 656 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி, 8 லட்சத்து 51 ஆயிரத்து 446 ஆண்கள், 8 லட்சத்து 92 ஆயிரத்து 947 பெண்கள், 304 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 17 லட்சத்து 44 ஆயிரத்து 697 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த தேர்தலின் போது இருந்த எண்ணிக்கையை விட, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
மேலும், 18, 19 வயதினர் முதல்முறையாக ஓட்டளிக்க உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் மட்டுமே, புதிய வாக்காளர்கள் 16,000 பேர் உள்ளனர்.
இத்தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.பி., செல்வம், மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். 2014 தேர்தலில் தோற்ற அவர், கடந்த தேர்தலில் வென்றார்.
அ.தி.மு.க., வேட்பாளராக, தென்சென்னை தொகுதியைச் சேர்ந்த ராஜசேகர், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளராக திருவள்ளூரைச் சேர்ந்த ஜோதி ஆகியோர், புதுமுகங்களாக களம் காண்கின்றனர்.
கடந்த தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், கூட்டணி அமைத்து சந்தித்தன.
தற்போதைய தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஓர் அணி, பா.ஜ., - பா.ம.க., ஓர் அணி என பிரிந்துஉள்ளன. அதனால், கடும் போட்டி நிலவுகிறது.
முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வயது வாக்காளர்கள், இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பற்றிய பலவித விமர்சனங்களை அறிந்துகொண்டு, ஓட்டளிக்க வருகின்றனர்.
அவர்களின் ஓட்டுக்கள் எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என, அரசியல் கட்சியினர் குழப்பத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

