/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி பயன்பாட்டிற்கு வருவது.. எப்போது?: கட்டி முடித்து 4 மாதங்களாக காத்திருக்கும் அவலம்
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி பயன்பாட்டிற்கு வருவது.. எப்போது?: கட்டி முடித்து 4 மாதங்களாக காத்திருக்கும் அவலம்
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி பயன்பாட்டிற்கு வருவது.. எப்போது?: கட்டி முடித்து 4 மாதங்களாக காத்திருக்கும் அவலம்
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி பயன்பாட்டிற்கு வருவது.. எப்போது?: கட்டி முடித்து 4 மாதங்களாக காத்திருக்கும் அவலம்
ADDED : ஆக 24, 2025 11:21 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாணவிகள் விடுதியை முதல்வர் திறந்து வைத்து 4 மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடிக்கிடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் என 7 இளங்கலை பாடப்பிரிவுகள், எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல் என, 4 முதுகலை பாடப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரி தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே சடையம்பட்டு கிராம எல்லையில் இயங்குகிறது.
இங்கு வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவ மாணவிகள் தங்கி பயில தனித்தனி விடுதி உள்ளது.
மாணவர்களுக்கான விடுதி தண்டலை - பெருவங்கூர் சாலையில் உள்ளது. இதில் 80 மாணவர்கள் தங்கி பயில்கின்றனர்.
அதேபோல் மாணவிகளுக்கான விடுதிக்கு சொந்த கட்டடம் இல்லாததால் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பள்ளி மாணவிகள் விடுதி கட்டடத்தில், தற்காலிகமாக 80 கல்லுாரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது மட்டுமின்றி, இடப்பற்றாக்குறையாலும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையொட்டி கல்லுாரி மாணவிகளுக்கு என தனி விடுதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனையொட்டி அரசு கல்லுாரியின் பின்புறம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடி மதிப்பில் மாணவியர் விடுதி கட்டப்பட்டது.
100 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் தரைதளத்தில் 8 அறைகள், முதல் தளத்தில் 8 அறைகளுடன் கட்டப்பட்டது. மேலும், கட்டட உட்புற அறைப்பகுதியில் மாணவிகளுக்கான குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்., 14ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கல்லுாரி விடுதியை திறந்து வைத்தார்.
கல்லுாரி விடுதி திறந்து 4 மாதம் கடந்தும் இதுவரை செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
புதிய கல்லுாரி மாணவிகள் விடுதிக்கு இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் விடுதி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.
இட நெருக்கடியில் தங்கி பயிலும் கல்லுாரி மாணவிகள் நலன் கருதி, புதிய விடுதி கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.