/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் நகரில் சாலைகள்... ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
/
திருக்கோவிலுார் நகரில் சாலைகள்... ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
திருக்கோவிலுார் நகரில் சாலைகள்... ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
திருக்கோவிலுார் நகரில் சாலைகள்... ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 23, 2024 11:46 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுாரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. நகரில் சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு வீதி, சன்னதி வீதிகளில் 15 அடி துாரம் வரை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் இது போன்ற வணிகப் பயன்பாட்டிற்கான கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாமல் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இதே போல், உலகளந்த பெருமாள் வீற்றிருக்கும் சன்னதி தெருவில் நிலைமை படுமோசம். திருக்கோவிலுார் நகரில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றங்களும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதே சமயத்தில், நில அளவைத் துறை அலுவலர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக அளந்து குறியீடு செய்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் வருவாய்த்துறையினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட எந்தத் துறை அதிகாரிகளும் முன்வருவதில்லை. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முறையாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஏமாற்றமே.
சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தேர்தலுக்காக ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தும் அரசியல்வாதிகளின் செயலால் அதிகாரிகள் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக் கொள்கின்றனர். இதுவே திருக்கோவிலுாரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நகரில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்றினால் பறந்து விரிந்து தேரோடும் மாட வீதிகள் மட்டுமல்லாது, நகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் நிம்மதியடைவர்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

