தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?


UPDATED : செப் 08, 2026 04:27 PM

ADDED : செப் 08, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 04:27 PM ADDED : செப் 08, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி பொய் கூறி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து பொதுமக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மூட்டை துாக்குதல், கரும்பு வெட்டுதல், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட உடலுழைப்பு சார்ந்த வேலைகளை செய்யும் பலர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் சம்பாதிக்குமு் பணத்தை சேமித்து வைக்க முடியாது.

இதனால், பலர் கடனில் சிரமப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் கடனை அடைத்து குடும்ப சூழ்நிலையை சரிசெய்ய நினைக்கும் சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக முயற்சி மேற்கொள்கின்றனர்.

உள்ளூரை விட வெளிநாட்டில் அதிக சம்பளம் என்பதாலும், கூடுதல் நேரம் பணிபுரிந்தால் பணத்தை சேமிக்கலாம் எனவும் கருதும் கூலித் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உள்ள வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட்டுகளை தொடர்பு கொள்கின்றனர்.

இதில், பணத்திற்கு ஆசைப்படும் ஒரு சில ஏஜன்ட்டுகள் பொய்யான வேலை மற்றும் சம்பளத்தை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இதுபோன்ற ஏஜன்ட்டுகளின் கட்டுப்பாட்டில் சப் ஏஜன்ட்டுகளாக இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலை குறித்த தகவல் தெரியாது.

ஆனால், தங்களுக்கு தெரிந்த நபர்களை ஏஜன்ட்டுகளிடம் அறிமுகப்படுத்துவதால் குறிப்பிட்ட அளவு தொகை வழங்கப்படும். இதுதவிர, முதலில் டூரீஸ்ட் விசாவில் வெளிநாட்டிற்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி, பணிக்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம், இதன் மூலம் செலவு குறையும் எனவும் ஒரு சில ஏஜன்ட்டுகள் தெரிவிக்கின்றனர்.

ஏஜன்ட்டுகள் கூறும் ஆசை வார்த்தைகளை கண் மூடித்தனமாக நம்பும் கிராமப்புற மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நிலையில், அங்கு எதிர்பார்த்த வேலையும் கிடைக்காமல், உரிய சம்பளமும் கிடைக்காமல் சிக்கித் தவிக்கின்றனர்.

டூரிஸ்ட் விசாவில் சென்ற பலர் சில மாதங்கள் மட்டும் தங்கி விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். ஒரு சிலர் வேறு வழியின்றி குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், தங்களது இக்கட்டான சூழலை தெரிவித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவுவதன் மூலம் ஒரு சிலர் மட்டும் பத்திரமாக மீட்கப்படுகின்றனர்.

சமீபத்தில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண் குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற நிலையில் அங்கு சம்பளம் தராமல் கொடுமைப்படுத்துவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து இந்திய துாதரக அதிகாரிகள் அனிதாவை பத்திரமாக மீட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அனிதாவை வெளிநாட்டிற்கு அனுப்பிய போலி ஏஜன்ட் திருவண்ணாமாலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பொய்யான வேலை மற்றும் சம்பளத்தைக் கூறி வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் மீதான நடவடிக்கையை போலீசார் தொடர வேண்டும். அத்துடன், போலி ஏஜன்ட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us