/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென் பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
/
தென் பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
ADDED : டிச 14, 2024 03:55 AM
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 7,321 மில்லியன் கனஅடியில் (119 அடி) அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 6,657 மில்லியன் கன அடி (116 அடி) நீர் இருப்பு வைக்கப்பட்டது.
அதற்கு மேல் அணைக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது. அதன்படி 5,000, 7,500 கன அடி என வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வந்தது.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், அணையின் கீழ் பகுதியில் தென்பெண்ணை ஆற்றுடன் இணையும் பாம்பாறு படுகையில், நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இத்துடன் பாம்பாறு உள்ளிட்ட ஓடை பகுதிகளிலிருந்து வரும் தண்ணீரின் அளவையும் சேர்த்து திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் வெள்ளம் வடிந்து வந்த நிலையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பது கரையோர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

