/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலக கட்டட பணிகளால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி
/
மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலக கட்டட பணிகளால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி
மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலக கட்டட பணிகளால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி
மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலக கட்டட பணிகளால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி
ADDED : பிப் 27, 2024 11:43 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலகத்திற்கான கழிப்பிடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இயக்க முடியாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டி வியாபாரிகள், கமிட்டி கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் தற்காலிக அடிப்படையில் இயங்கி வருகின்றது. கமிட்டியின் இ-நாம்ஸ் தேசிய சந்தைப்படுத்துதல் முறைக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், குடோன்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனால் இ-நாம்ஸ் தேவைக்காக பொருத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பயனின்றி வீணாகி வருகிறது. விவசாய விளைபொருட்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாமலும், வாகனங்களில் விளைபொருட்களை எடுத்து செல்லவோ, கொண்டு வரவோ, முடியாத அளவிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கமிட்டியின் முக்கிய வழித்தடத்தை கலெக்டர் அலுவலகத்திற்கான முகப்பு வாயிலாக பயன்படுத்தியும் வருகின்றனர். இதனால் கமிட்டிக்குள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லவே முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கமிட்டியின் மேலும் ஒரு கட்டடம் கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டதால், கமிட்டிக்குள் வாகனங்களை இயக்க முடியாமல் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் வியாபாரிகள் கமிட்டியில் ஒரு நாள் வர்த்தகத்தை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். வியாபாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக பிரச்னை விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
ஆனால் கமிட்டியின் உள்ளேயே முக்கிய வழித்தடத்திலேயே கலெக்டர் அலுவலக கட்டடத்திற்கான கழிப்பறை கட்டும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இதனால் எதிர்வரும் எள் சீசனில் கமிட்டிக்கு விளைபொருட்களை கொண்டு வரவோ, எடுத்து செல்லவோ முடியாமல் போகும்.
இதனால் நாங்கள் மட்டுமல்ல, விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதை சுட்டிக்காட்டி வர்த்தகர்கள் கமிட்டி கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்தனர். கமிட்டி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், இதுகுறித்து கமிட்டி செயலாளரிடம் பேசுகிறேன் எனக்கூறி வியாபாரிகளிடம் சமரசம் செய்து வர்த்தகத்தை தொடர்ந்தார்.
கமிட்டியின் வளாகம் முழுவதையும், கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு தாரை வார்க்கப்படுவதால், கமிட்டிக்கு விளைபொருட்களை நம்பிக்கையுடன் எடுத்து வரும் விவசாயிகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவர். விவசாயிகள் மீது அதிக அக்கரையுடன் செயல்படும் அரசாங்கத்துக்கு இதனால் கெட்ட பெயர்தான் வரும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

