/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் துவக்கி வைப்பு
/
வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 25, 2025 10:46 PM

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி நகராட்சியில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின்கீழ் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அம்மன் நகர் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் பூங்கா, வையாபுரி நகர் பகுதியில் ரூ.51 லட்சம் மதிப்பில் பூங்கா ஆகியவைகளை கலெக்டர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
துருகம் சாலையில் உள்ள எரிவாயு தகன மேடை மயானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் இறுதிச் சடங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக எப்.எஸ்.எஸ்., எனும் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை 2.4 லட்சம் நிதி உதவி வழங்கியது. பணிகள் முடிந்ததால் மண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் மண்டபத்தை திறந்து வைத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன எல்.பி.ஜி., எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, துணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி கமிஷனர் சரவணன், எப்.எஸ்.எஸ்., தலைவர் பெருமாள், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன், நிர்வாகிகள் குமரேசன், அசோக்குமார், பாலாஜி, வில்சன், மருதை, கோபாலகிருஷ்ணன், பாண்டியன், கண்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.