/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மெகா துாய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை... தேவை; வடகிழக்கு பருவமழைக்கு முன் துவங்க கோரிக்கை
/
மெகா துாய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை... தேவை; வடகிழக்கு பருவமழைக்கு முன் துவங்க கோரிக்கை
மெகா துாய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை... தேவை; வடகிழக்கு பருவமழைக்கு முன் துவங்க கோரிக்கை
மெகா துாய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை... தேவை; வடகிழக்கு பருவமழைக்கு முன் துவங்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 06:53 AM

கள்ளக்குறிச்சி: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் ஒட்டுமொத்த மெகா துாய்மை பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தி வீணாகும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் இருந்தாலும், துார் வாரப்படாமல் இருப்பதால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை பல வருடங்களாக தேங்கி நிற்கிறது. இதுதவிர, ஊரில் பயன்படுத்தப்படாத அரசு, தனியார் நிலங்களில் சாக்கடையுடன் புற்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
குறிப்பாக, கிராம புற வீடுகளில் உள்ள உரல், தேங்காய் சிரட்டை, பயன்படுத்தபடாத டயர், திறந்தவெளி தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் கண்டுகொள்வது இல்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கழிவுநீர் கால்வாய், புதர்மண்டி கிடக்கும் இடங்கள், நீண்ட நாட்களாக கொட்டி கிடக்கும் குப்பைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரு சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், திடீரென மழையும் பெய்கிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பலருக்கு தலைவலி, காய்ச்சல், சளி, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறாமல், கிராமப்புற மருந்தகங்களில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்கின்றனர்.
இதன் விளைவாக காய்ச்சல், சளி மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது.
செப்., மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கிடும். அதற்குள், மாவட்டம் முழுதும் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும். சுகாதார துறை, உள்ளாட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இணைந்து அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்தமாக மெகா துாய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். வீடுகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, உரல், டயர், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில், சரியான அளவு விகிதத்தில் குளோரின் பவுடர் கலக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்த கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.