/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்
/
வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்
ADDED : ஏப் 16, 2024 07:13 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறோம் என கோஷமிட்டவாறு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற சங்க நிர்வாகிகளை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, 2 பேர் மட்டும் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணனிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டு மனு அளித்தனர்.
மனு விபரம்:
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கிறோம். ஆனால், ஆண்டுதோறும் அரசாணைகளை மாற்றி எங்களது வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நியமனம் செய்ய மீண்டும் ஒரு போட்டித்தேர்வு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம். இதனால், தேர்தலில் ஓட்டளிக்க விருப்பமில்லை. வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் சமாதானம் செய்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

