சாலையோரம் வீசப்பட்ட
மருந்து குவியலால் அச்சம்
சென்னிமலை: சென்னிமலை, ஈங்கூர் ஊராட்சி சிப்காட், சிப்காட் பொது சுத்திரிப்பு நிலையம் அருகே, குட்டப்பாளையம்-குமாரபாளையம் செல்லும் சாலையோர புதரில் அல்லோபதி மருந்துகள் பெட்டி, பெட்டியாக வீசப்பட்டிருந்தது. ஒரே இடத்தில் இல்லாமல் நான்கு இடங்களில் கொட்டப்பட்டிருந்தது. இதில் பாதி மருந்து காலவதியானது, மீதி மருந்துகளுக்கு இன்னும் காலாவதி உள்ளது. அரசு மருத்துவனைக்கு வழங்கப்பட்டதா அல்லது ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதா, தனியார் மருந்து வினியோக நிறுவனத்தினர் கொட்டி சென்றனரா? என்பது தெரியவில்லை. பள்ளி விடுமுறை தினம் என்பதால் அப்பகுதி சிறுவர்கள் மருந்து பற்றி அறியாமல் எடுத்து விளையாடினர். யார் கொண்டு வந்து கொட்டியது என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கேர்மாளம் ஊராட்சியில்
குடிநீர் வராததால் மறியல்
சத்தியமங்கலம்: தாளவாடி மலை கேர்மாளம் ஊராட்சி தழுதி மலை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒரு மாதமாக இவர்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராடசி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீருக்காக அருகிலுள்ள தோட்டங்களில் பகல், இரவு நேரங்களில் தண்ணீர் பிடித்தனர். அப்போது யானை துரத்திய சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், தழுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கேர்மாளம் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர். ஊராட்சி செயலாளர் பேச்சுவார்த்தையால், அரை மணி நேரத்தில் மறியல் முடிவுக்கு வந்தது.

