/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தை கோலாகலமாக துவக்கம்
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தை கோலாகலமாக துவக்கம்
ADDED : ஏப் 11, 2024 07:33 AM
காங்கேயம் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள ஓலப்பாளையம் கண்ணபுரத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, மாட்டு சந்தை தொடங்கியுள்ளது.
கண்ணபுரம், விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் வரும், 23ம் தேதியும், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, 25ம் தேதியும் நடைபெற உள்ளது. இக்கோவில் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சந்தை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் சந்தை துவங்கியது. புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார் மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மாடுகள் வாங்க வந்தனர். வெள்ளகோவில், திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், கோவை பகுதிகளிலிருந்து காங்கேயம் இன மாடுகள், காளைகள், கிடேரி கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நாட்டு மாடுகளுக்கு என கடந்த, 1,100 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும். இங்கு 6 மாத இளங்கன்றுகள், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள், 40 ஆயிரம் முதல், 90 ஆயிரம் வரையும், ஒரு ஜோடி காளைகள், 65 ஆயிரம் முதல், ரூ.1.30 லட்சம் வரையும், பூச்சி காளைகள், 1 லட்சம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன. திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து மாடுகள் வாங்க வருவோரும், கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்த வருவோரும், திரும்பி செல்லும்போது மறவாமல் சாட்டை வாங்கிச் செல்வது தொன்று தொட்டு நடந்து
வருகிறது.

