/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
345 பேரிடம் ரூ.62 கோடி மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது
/
345 பேரிடம் ரூ.62 கோடி மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது
345 பேரிடம் ரூ.62 கோடி மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது
345 பேரிடம் ரூ.62 கோடி மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : டிச 12, 2024 01:13 AM
ஈரோடு, டிச. 12-
ஈரோட்டில், யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்தி, 345 பேரிடம், ரூ.62 கோடி வரை மோசடி செய்த வழக்கில், முன்னாள் ராணுவ வீரரை பொருளாதார குற்றப்
பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு முனிசிபல் காலனியில், யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ், நசியனுார் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்கள், 2017ல் துவங்கப்பட்டது. ஈரோடு இடையன்காட்டு வலசு, சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்குமார், 38, நிர்வாக இயக்குனராகவும், பங்குதாரராக முன்னாள் ராணுவ வீரரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வன், 48, என்பவரும் இருந்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு
இந்நிறுவனங்களில், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் இரு தவணையாக, 9,000 ரூபாய் வீதம் மாதத்துக்கு, 18 ஆயிரம் என கணக்கிட்டு ஆண்டுக்கு, ஒரு லட்சத்து, 80 ஆயிரம் திரும்ப வழங்குவதாகவும், ஐந்து லட்சம் முதலீடு செய்தால், 10 மாதங்களில், ஏழு லட்சத்து, 50 ஆயிரமும், 10 லட்சம் முதலீடு செய்தால் ஒரே தவணையாக, 18 மாதங்களில், 15 லட்சமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மையென நம்பி, முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் பலர் பணத்தை முதலீடு செய்தனர்.
முதல் இரு தவணைகள் மட்டும் பணத்தை வழங்கிய நிறுவனத்தினர், பின்னர் சில மாதங்களாக வட்டி, அசல் தொகையை வழங்கவில்லை. முதலீடு செய்த மக்கள் அந்நிறுவனத்துக்கு சென்றபோது பூட்டப்பட்டு இருந்தது. நிர்வாக இயக்குனர், ஊழியர்கள் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, 2023 நவ.,23ல் துபாய் தப்ப முயன்ற நவீன்குமாரை, சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
௩௪௫ பேர் புகார்
கடந்த மாதம் வரை இரண்டு நிறுவனங்களிலும், 62 கோடி ரூபாய் வரை முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக, 345 பேர் புகார் அளித்துள்ளனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்டு, 10 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த, முன்னாள் ராணுவ வீரரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வன், 48, சேலத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சேலம் சென்று, முத்துசெல்வனை கைது செய்து, ஈரோடு பொருளாதார
குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்து
வருகின்றனர்.

