ADDED : ஜூன் 17, 2024 01:21 AM
மொட்டை மாடியில் மொபைலில்
பேசியவர் தவறி விழுந்து பலி
பெருந்துறை: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அடுத்த குளத்துார் நடுவீதியை சேர்ந்தவர் தங்கமுருகன், 48. இவர், பெருந்துறை சின்னமடத்துபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் வீட்டு மொட்டை மாடியில் யாரிடமோ மொபைல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை பார்த்தபோது, வீட்டிற்கு வெளியே கீழே விழுந்து மயங்கி கிடந்தார். உடனே மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வீட்டு மொட்டை மாடியில் போனில் பேசிக் கொண்டு இருந்தபோது, தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நால்ரோட்டை கடக்கபாதசாரிகள் அவதி
கோபி: கோபி, வெள்ளாளபாளையம் பிரிவு நால்ரோட்டை கடக்க பாதசாரிகள் அவதியுறுகின்றனர்.
கோபி-ஈரோடு சாலையில், வெள்ளாளபாளையம் பிரிவில் நால்ரோடு உள்ளது. எந்நேரமும் வாகன நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், பிரதான சாலையை கடக்க பாதசாரிகள் அவதியுறுகின்றனர். ஒருபுறம் இருந்து மறுபுறம், பஸ் பயணத்துக்காக இடமாறுவோர் அவதியுறுகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிகள், முதியவர்கள் சாலையை கடக்க அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், பிரதான சாலையை கடக்க வசதியாக, ஜீப்ரா கிராசிங் கோடு அமைக்க, பாதசாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.5.36 லட்சத்திற்குவாழைத்தார்கள் விற்பனை
அந்தியூர்,: அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. கதளி கிலோ 48 ரூபாய், நேந்திரம், 42 ரூபாய், பூவன் தார், 650 ரூபாய், செவ்வாழை, 930, ரஸ்தாளி, 750, மொந்தன் தார், 480 ரூபாய் என மொத்தம், 2,250 வாழைத்தார்கள் வரத்தாகி, 5.36 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

