/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
13,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு
/
13,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு
ADDED : பிப் 08, 2024 12:11 PM
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்க உள்ள அரசு விழாவில், 13,000 பேருக்கு அமைச்சர் உதயநிதி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை, 10:00 மணிக்கு அரசு விழா நடக்கிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலர் செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி வரவேற்கிறார்.
வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவில், 2,337 மகளிர் குழுவிருக்கு, 100.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி, வருவாய் துறை உட்பட பிற துறைகள் சார்பில், 10,478 பயனாளிகளுக்கு, 72 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
சத்தியமங்கலம் நகராட்சி, கூட்டுறவு துறை, வேளாண் துறை, பள்ளி கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை துறை, நெடுஞ்சாலை துறை உட்பட பல துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 29 கட்டடங்களை அமைச்சர் உதயநிதி திறந்து வைக்கிறார். மேலும், 7.99 கோடி ரூபாய் மதிப்பில், 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.
விழா மேடை அமைக்கும் பணியை நேற்று அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், எஸ்.பி., ஜவகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

