ADDED : மார் 26, 2026 05:33 AM
காங்கேயம், தமிழக சட்டசபை நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, காங்கேயம், வெள்ளகோவிலில் உரிமம் பெற்ற, 109 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்த, திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி இருந்தது.
காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில், 109 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில், 59 பேரும், வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில், 50 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வுக்கு பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும்.
