/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழகத்தை காக்க முடியாதவர் இந்தியாவை காக்க போகிறார்?
/
தமிழகத்தை காக்க முடியாதவர் இந்தியாவை காக்க போகிறார்?
தமிழகத்தை காக்க முடியாதவர் இந்தியாவை காக்க போகிறார்?
தமிழகத்தை காக்க முடியாதவர் இந்தியாவை காக்க போகிறார்?
ADDED : ஏப் 06, 2024 04:00 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டையில், பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் வரவேற்றார். வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசியதாவது:
'ஸ்டாலினை பார்த்து குடும்ப ஆட்சி நடத்துகிறார்' என்றால், 'ஆம், தி.மு.க.,வின் நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற குடும்பத்தினரை கொண்டு ஆட்சி நடத்துகிறேன்' என்கிறார். அ.தி.மு.க.,வில் என்னை போன்ற சாதாரண கிளை செயலாளர், பஞ்சாயத்து தலைவராக இருந்து கட்சி பொது செயலாளர் மற்றும் முதல்வராக முடிந்தது. அதுபோல தி.மு.க.,வின் அடுத்த தலைவர் அல்லது முதல்வர் இவர்தான் என, அவரது குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரையாவது சொல்ல முடியுமா என விளக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின், 10 ஆண்டு சாதனையை நான் பட்டியலிட தயார். தி.மு.க.,வின், 3 ஆண்டு சாதனையை விளக்க தயாரா என ஸ்டாலின் கூற வேண்டும்.
முதல்வராக ஜெ., இருந்தபோது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, முதலில், 2.62 லட்சம் கோடி ரூபாய், அடுத்தாண்டு, 3.05 கோடி ரூபாய்க்கும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது.
தற்போதைய லோக்சபா தேர்தல் விளம்பரத்தில், 'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்' என கூறியுள்ளனர். தமிழகத்தையே காக்க முடியவில்லை; இதில் இந்தியாவை எங்கே காக்க போகிறீர்கள். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 'ராகுல்தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்' என ஸ்டாலின் அறிவித்தார். அதை மம்தா, கேரளா காங்., என யாரும் ஏற்கவில்லை. தேர்தலுக்கு பின், காங்., கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது.
தற்போது எங்களை பார்த்து, அ.தி.மு.க., யாரை பிரதமர் வேட்பாளர் என கூறி, ஓட்டு கேட்கட்டும் என ஸ்டாலின் கூறுகிறார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஸாவில் பட்நாயக், கேரளா கம்யூனிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் மம்தா ஆகியோர், யார் பிரதமர் வேட்பாளர் என கூறாமல்தான் தேர்தலை சந்திக்கின்றனர்.
மாநில பிரச்னைகளை முன்வைத்தும், மத்திய அரசு அமையும்போது அவர்களிடம் இருந்து மாநில நலனை பெறும்படியான அரசை அமைக்கவே, நாம் ஓட்டு கேட்கிறோம்.
ஈரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, 'காளிங்கராயன் வாய்க்காலில் சாராய கழிவு ஓடுவதாக' கூறுகிறார். காளிங்கராயன் வாய்க்காலுக்கான திட்டத்தை அ.தி.மு.க., அரசுதான் அமைத்து என்பதை மக்கள் அறிவார்கள். அதுபோல எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க.,வால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

