/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம்
/
சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம்
ADDED : ஏப் 03, 2024 07:40 AM
ஈரோடு : ஈரோடு மாநகரில் பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
நடப்பாண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த மார்ச், 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை வைத்து வழிபட்டனர். இதேபோல் அன்றைய தினமே, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டப்பட்டது.
கம்பம் நடும் விழா
கடந்த மார்ச், 23ம் தேதி இரவு 8:30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம் நடந்தது. 10:௦௦ மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் மூன்று கம்பங்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, பூசாரிகள் தங்களது தோளில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வந்து, பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்களை நட்டனர். அன்று முதலே கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மார்ச், 27ம் தேதி இரவு கிராம சாந்தி, 28ம் தேதி மாலை கொடியேற்றம் நடந்தது.
குண்டம் விழா
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குண்டம் விழா நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின் இரவில் மாவிளக்கு பூஜை, கரகம் எடுத்து வருதல் நடந்தது.
தேரோட்டம்
இன்று காலை, 9:30 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. பின் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. கோவிலில் இருந்து புறப்படும் தேர் பல்வேறு வீதிகளில் பக்தர்களின் தரிசனத்துக்காக நிறுத்தப்படும். நாளை இரவு, 9:30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. 5ம் தேதி மாலை, 4:௦௦ மணிக்கு, சின்ன மாரியம்மன் கோவிலுக்கு தேர் நிலை வந்தடைகிறது. இரவு, 8:௦௦ மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், மலர் பல்லக்கில் வீதியுலா, 9:30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது.
மஞ்சள் நீராட்டு விழா
விழா முக்கிய நிகழ்ச்சியாக, 6ம் தேதி மதியம், 3:௦௦ மணிக்கு கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. கம்பம் பிடுங்கப்பட்டதும் மாநகர் முழுவதும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வர். மூன்று கோவில்களில் இருந்தும் பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து மாநகரின் முக்கிய சாலை வழியாக கம்பங்கள் கொண்டு செல்லப்படும். அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று கம்பங்களின் மீது உப்பு, மிளகை துாவி வழிபடுவர். அதன்பிறகு கம்பங்கள் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். 7ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார், கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

