ADDED : ஏப் 25, 2026 05:43 AM
திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 116 வேட்பாளர்கள் களம் கண்டனர். 1,118 மையங்களில் அமைக்கப்பட்ட 2,822 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக 2,822 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக, 24 வேட்பாளர்கள் போட்டியிட்ட திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் கூடுதலாக 578 பேலட் யூனிட்கள் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,111 பேலட் யூனிட்கள் பயன்பாட்டில் இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை 11:00 மணி வரை, அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் எல்.ஆர்.ஜி. கல்லுாரிக்குக் கொண்டு வரப்பட்டன. அங்குள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில் ஓட்டுச்சாவடி வாரியாக இவை அடுக்கி வைக்கப்பட்டன. தேர்தல் பார்வையாளர் சுதா வர்மா மற்றும் கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலையில், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
நான்கு அடுக்கு வளையம்
தற்போது வாக்கு எண்ணிக்கை மையம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போன்ற பாதுகாப்பு வளையத்தில் உள்ளது: சிசிடிவி கண்காணிப்பு: 200-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் 'மூன்றாவது கண்' கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூம் முன்பு துணை ராணுவ படையினர்; ஸ்டராங் ரூம் கட்டடத்தில் அதிரடி படையினர், வளாகத்தில் ஆயுதப்படையினர், நுழைவு வாயில் பகுதியில் போலீசார் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையற்ற மின்சாரம்
கண்காணிப்புக் கருவிகள் தொய்வின்றி இயங்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநபர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களின் முகவர்களும் மைய வளாகத்திலேயே முகாமிட்டுக் 'கண்கொத்திப் பாம்பாக' கவனித்து வருகின்றனர். வரும் மே 4-ம் தேதி இந்த ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்; திருப்பூரின் வெற்றியாளர் யார் என்பது தெரியவரும்.
முகவர்கள் மோதிர முத்திரை
வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு அறையின் கதவுகள் பூட்டப்பட்டு, துணி சுற்றி அரக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வேட்பாளர்களின் முகவர்கள் தங்கள் கை மோதிரங்களைக் கொண்டு அந்த அரக்கில் தனித்துவமான அச்சு வைத்தனர். வாக்கு எண்ணும் நாளில் இதே அச்சு இருப்பதை அவர்கள் மீண்டும் உறுதி செய்துகொள்வர்.
