ADDED : ஏப் 18, 2026 05:43 AM
திருப்பூர் :தேர்தல் பாதுகாப்பு பணிகளில், மாவட்ட மற்றும் மாநகர போலீசார், 2,704 பேர் மற்றும் அரசு பஸ் டிரைவர், நடத்துனர், டாக்டர்கள், மின்வாரிய அதிகாரிகள், தபால் துறையினர் 400 க்கும் மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கான தபால் ஓட்டு பதிவு, எட்டு தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நேற்று துவங்கியது.
தாராபுரத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம், காங்கயத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசியில் தாலுகா அலுவலகம், திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேலம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தொகுதியில், டவுன்ஹால், பல்லடத்தில், தாலுகா அலுவலகம், உடுமலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது. காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இன்று, நாளை (19 ம் தேதி), நாளை மறுநாள் (20ம் தேதி) வரை, போலீசார் மற்றும் அத்தியாவசிய துறை சார்ந்தோருக்கான தபால் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. தினசரி தபால் ஓட்டுப்பதிவு முடிந்தபின், ஓட்டு பெட்டிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்படுகின்றன.
