ADDED : ஏப் 18, 2026 05:50 AM
திருப்பூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, சீமான், விஜய், பழனிசாமி ஆகியோர் பிரசாரத்தை முடித்துள்ளனர். தலைவர்கள் பிரசாரம் எந்தளவு, மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களை ஈர்த்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தல் களத்தில் பிரசாரம் உச்சகட்டத்தை நோக்கிச் செல்கிறது. வரும் 21ம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைந்து, 23-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சியினர், முழு பலத்தையும் காட்டி வருகின்றனர். திருப்பூரில் முக்கிய தலைவர்களின் பிரசாரம், தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீமான், விஜய்நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2ம் தேதி திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். தற்சார்புப் பொருளாதாரம் மற்றும் சூழலியல் அரசியலை முன்னிறுத்தி, பாலிதீன் ஒழிப்பு மற்றும் நொய்யல் மீட்பு குறித்த தனது அதிரடித் திட்டங்களை முன்வைத்தார்.
தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று, த.வெ.க தலைவர் விஜய் 'ரோடு ேஷா' மேற்கொண்டார். பெருமாநல்லுார் பகுதியில் பிரமாண்டமாகத் தனது அரசியல் வருகையைப் பதிவு செய்தார். '100 சதவீதம் நம்பலாம்' என்று கூறிய அவர், இளைஞர்களையும், பெண்களையும் கவரும் வகையில் பேசினார்.
பழனிசாமி, அண்ணாமலைஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்றுமுன்தினம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூரில் மேற்கொண்ட பிரசாரத்தில், முத்ரா கடன் உதவி, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், திருப்பூரின் சாமானிய மக்கள் மற்றும் தொழில்துறையினருக்கு எப்படியெல்லாம் பயனுள்ளவையாக இருந்தன என்பதை வி ளக்கினார்.
வாக்காளர்களின் உணர்வுகளைமையம் கொண்ட தலைவர்கள்திருப்பூரின் வாழ்வாதாரம் குறித்து தலைவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அந்தந்தக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டின. பழனிசாமி பேசுகையில், ''தொழில் நகரமான திருப்பூர் இன்று மின்கட்டண உயர்வால் இருண்டு கிடக்கிறது; அ.தி.மு.க. வந்தால் பின்னலாடைத்துறையினர் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு விடியல் பிறக்கும்” என உறுதியளித்தார். விஜய் தனது உரையில், “தொழிலைக் காப்பதே தனது இலக்கு” என்பது போன்று தற்சார்புப்பாதை நோக்கி நகர்ந்தார்.
சீமானோ, “மூலப்பொருளான நுாலை அரசே நியாயமான விலையில் வழங்கினால் போதும்; நொய்யலைச் சுத்தப்படுத்தித் திருப்பூரை நன்னீர் நகரமாக்குவேன்” என இயற்கை மற்றும் அடிப்படைத் தேவையைக் கூர்மையாகப் பேசினார்.
தலைவர்களின் பிரசாரங்களை உற்று நோக்கினால், திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளும் வெவ்வேறு உணர்வுகளில் சிக்கி இருப்பது தெரிகிறது.
நமது நிருபர்
