/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அணைகளும் துார்வாரப்படும் பழனிசாமி உறுதி
/
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அணைகளும் துார்வாரப்படும் பழனிசாமி உறுதி
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அணைகளும் துார்வாரப்படும் பழனிசாமி உறுதி
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அணைகளும் துார்வாரப்படும் பழனிசாமி உறுதி
ADDED : செப் 07, 2025 03:23 AM

திண்டுக்கல்: ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் துார்வாரப்படும்'' என அக்கட்சியின் பொதுசெயலாளர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம் தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வரும் பழனிசாமி நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் வந்தார்.
நேற்று திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பார்சன்ஸ் கோர்ட் ஓட்டல் சிறுமலை அரங்கில் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள், கோரிக்கைகள், குறைகள் குறித்து வணிகர்கள், வர்த்தக சங்கத்தினருடன் கலந்தாலோசனைக்கூட்டம் நடந்தது. 13 அமைப்புகளை சேர்ந்தநிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள், சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் தேவைகள் குறித்து இதில் பங்கேற்றோர் பேசியதாவது:
முருகசேன்,சேம்பர் ஆப் காமர்ஸ், திண்டுக்கல்: தி.மு.க., ஆட்சியில் சொத்துவரி, வீட்டுவரி வணிகவரி ஆகியவை 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆண்டுக்காண்டு 6 சதவீதம் உயரும் . 7 விதமாக வரிசெலுத்துவதை ஒரே வரியின் கீழ் கொண்டு வரவேண்டும். ஜி.எஸ்.டி.,வரியை குறைக்க வேண்டும்.
செல்லமுத்தையா, விவசாயிகள் சங்கம்: தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, குற்ற நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், உள்ளிட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. குடகனாறு, மஞ்சளாறு நீர்வரத்து கால்வாய்கள் ஓடைகளை துார்வாரி நீர்ஆதாரங்களை பெருக்கவேண்டும் .
அமலதாஸ், பேராயர்: வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் .
கணேசன், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்கம்: ஒரு சதவீத செஸ் வரியை நீக்க வேண்டும். பருப்பு வியாபாரத்திற்கு வெளி மாநிலங்களில் ஒருவரியும், தமிழகத்தில் ஒருவரியும் விதிக்கப்படுகிறது.
அப்துல் ரஹீம், தோல் வர்த்தகர் சங்கம்: 'தோல் உற்பத்தியாளர்கள் நலன்காக்க தோல் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் மின்சாரதட்டுபாடு உள்ளதால் தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டும். ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராஜ்குமார் , ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்: இந்த ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்துவிட்டது. ஹ ஓட்டல்களில் சப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்டு ஓட்டல் உரிமையாளர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமலையில் பல்லுயிர் பெருக்க பூங்கா, நீர்வீழ்ச்சியை மேம்படுத்தி சிறந்த சுற்றுலாத்தலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசியதாவது :
அனைவரின் குறைகளையும் மனுவாக கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். அதிகப்படியான வரி சீர் செய்யப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம். 2முறை பயிர்கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சார இணைப்பு, விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் உள்ளிட்ட திட்டங்கள் வழங்கப்பட்டது. மஞ்சள் ஆறு துார்வாரப்படும். இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் தூர்வாரப்படும்.
வன்னியர்கிறிஸ்தவ மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். வரி உயர்வால் தோல் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளதால் இதை சரிசெய்ய மத்திய அரசுடன் பேசி இந்த தொழில் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியின்போது ரவுடிகள் ஒடுக்கப்பட்டனர்.
பலர் பயந்து வெளிமாநிலங்களுக்கே ஓடினர். தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமானதால் இந்த பிரச்னை வருகிறது. போதைக்கு அடிமையாகி என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். இவை எல்லா வற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஓட்டல் உரிமையாளர்களை சந்தித்து அவர்கள் குறைகள் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.