/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிலோ ரூ. 2 க்கு விற்கும் முருங்கைக்காய்; மாடுகளுக்கு உணவாக வழங்கும் அவலம்.. விரக்தியில் விவசாயிகள்
/
கிலோ ரூ. 2 க்கு விற்கும் முருங்கைக்காய்; மாடுகளுக்கு உணவாக வழங்கும் அவலம்.. விரக்தியில் விவசாயிகள்
கிலோ ரூ. 2 க்கு விற்கும் முருங்கைக்காய்; மாடுகளுக்கு உணவாக வழங்கும் அவலம்.. விரக்தியில் விவசாயிகள்
கிலோ ரூ. 2 க்கு விற்கும் முருங்கைக்காய்; மாடுகளுக்கு உணவாக வழங்கும் அவலம்.. விரக்தியில் விவசாயிகள்
ADDED : ஏப் 03, 2024 05:24 AM

மாவட்டத்தில் குஜிலியம்பாறை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், ஆத்துார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப் பகுதிகளில் முருங்கைகாயை விற்பதற்கு முறையான மார்க்கெட்டிங் இல்லாததால் வார சந்தைகளுக்கு கொண்டு போய் விற்கின்றனர். அங்கு வரும் வியாபாரிகள் கேட்கும் விலைக்குத்தான் கொடுக்கும் நிலையில் உள்ளனர்.
இதுவரை ஓரளவு நல்ல விலைக்கு சென்ற முருங்கைகாய் தற்போது ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.5 வரை மட்டுமே விலை போகிறது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் கூலிக்கு ஆட்களை விட்டு காய்களை ஒடித்து விற்பனைக்கு கொண்டு சென்றால் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
தற்போது போதிய மழை இல்லாத நிலையில் இருக்கின்ற தண்ணீரை வைத்து முருங்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, பூ உதிர்வு போன்ற எந்த பிரச்னையும் இல்லாததால் காய் வரத்து கூடுதலாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் போதிய விலை இல்லாததால் காய்களை ஒடித்து கால்நடைகளுக்கு போட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். சிலர் காய்களை பறிக்காமல் அப்படியே மரத்தில் விட்டு விதைகளை பிரித்து எடுத்து விற்கின்றனர். இதிலும் போதிய விலை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இப்பகுதியில் உள்ள முருங்கை விவசாயிகளின் நலன் கருதி திண்டுக்கல் மார்க்கம்பட்டி,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் அந்த அறிவிப்பும் அறிவிப்போடு நின்று விட்டது. இதனால் முருங்கை விவசாயிகள் போதிய விலை இன்றி காய்களை விற்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். முருங்கை ஏற்றுமதி மண்டலத்தை ஆரம்பித்து முருங்கை விவசாயிகளிடமிருந்து போதிய விலையில் முருங்கைக்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை மட்டுமே தற்போது தீவிரமாக எழுந்துள்ளது. இல்லையேல் விவசாயத்தை விட்டு போவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

