/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதம் அடைந்த ரோடுகள், அடிக்கடி மின்தடை ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் சிரமம்
/
சேதம் அடைந்த ரோடுகள், அடிக்கடி மின்தடை ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் சிரமம்
சேதம் அடைந்த ரோடுகள், அடிக்கடி மின்தடை ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் சிரமம்
சேதம் அடைந்த ரோடுகள், அடிக்கடி மின்தடை ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் சிரமம்
ADDED : ஏப் 12, 2025 06:34 AM

ஒட்டன்சத்திரம் : சேதமடைந்த ரோடுகளால் வாகனங்களை இயக்க சிரமம், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அவதி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 7 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 7 வது வார்டில் தும்மிச்சம்பட்டிபுதூர், கஸ்தூரி நகர், மாருதிநகர், நாயக்கனூர் ஆகிய பகுதிகள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மலை அடிவாரத்தில் இருந்து தும்மிச்சம்பட்டிபுதூர், கஸ்தூரிநகர் கிழக்கு பகுதியில் செல்லும் ஓடை சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இருந்த போதிலும் பல இடங்களில் செடி கொடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனால் இரவில் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். கட்டி முடிக்கப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத சமுதாய சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வார்டில் மூன்று இடங்களில் பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டும், இதுவரை பூங்கா அமையவில்லை. கஸ்தூரி நகர் வடக்கு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் முதியோர்கள் குழந்தைகள் அவதிப்படுன்றனர். வீடுகளுக்கு போர்வெல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை இருக்கிறது.
சேதம் அடைந்த ரோடுகள்
சண்முகம், சமூக ஆர்வலர், தும்பிச்சம்பட்டி: தாராபுரம் ரோட்டில் இருந்து தும்மிச்சம்பட்டி புதூர் செல்லும் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி ரோட்டுடன் தும்மிச்சம்பட்டிபுதூர் ரோடு இணையும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகனங்களின் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பு வைக்க வேண்டும்.
ஓடைக்கு சுற்றுச்சுவர் தேவை
முத்துராமன், முன்னாள் கவுன்சிலர், ஒட்டன்சத்திரம்: பழநி ரோட்டில் இருந்து இந்த வார்டு வழியாக செல்லும் ஓடைக்கு சுற்றுச்சுவர் தேவை. கஸ்தூரி நகர் பகுதியில் ஓடையை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும். தும்மிச்சம்பட்டிபுதூர் பகுதியில் குழாய்கள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது. குழாய்களை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். ரேஷன் கடை முன்பு பேவர் பிளாக் கற்கள் அமைத்து நிழற்கூரை அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
கனகராஜ், கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த வார்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்தக் கட்டடத்தில் புதிய ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள தார் ரோடுகள் அனைத்தையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாயக்கனூரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கன்னிமார் கோயில் கஸ்தூரி நகர் பகுதியில் போர்வெல் தண்ணீர் வீடுகளுக்கே செல்லும் வகையில் வினியோகம் செய்யப்படும். நாயக்கனூர் பகுதிக்கு குடிநீர் பைப் லைன் அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

