ADDED : டிச 12, 2024 02:21 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கும்பூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது வளர்ப்பு மாடுகள் கும்பூர் மந்தையில் மேய்ச்சலில் ஈடுபட்டது.
அப்பகுதியிலிருந்த சிறுத்தை தாக்கியதில் பசுமாடு ஒன்று பலியானது. மேலும் ஒரு மாடு படுகாயமடைந்தது. இப்பகுதியில் ஒரு வாரத்தில் 4 வளர்ப்பு மாடுகள் சிறுத்தை தாக்கி பலியாகி உள்ளது. செந்நாய் தாக்கியதாக கருதிய விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த நிலையில் மாடுகளை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர். அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மன்னவனுார் ரேஞ்சர் திருநிறைசெல்வனிடம் கேட்ட போது ' சிறுத்தை தாக்கிய பகுதி ஆனைமலை புலிகள் காப்பக கொழுமம் வனச்சரகம்' எனக் கூறி தட்டிக்கழித்தார் . இப்பகுதியில் வனவிலங்கு தாக்குதலால் வளர்ப்பு பிராணிகள் பலியாவது தொடரும் நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

