/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' மலைப்பூண்டு மகசூலில் கூடுதல் மழையால் பாதிப்பு
/
'கொடை' மலைப்பூண்டு மகசூலில் கூடுதல் மழையால் பாதிப்பு
'கொடை' மலைப்பூண்டு மகசூலில் கூடுதல் மழையால் பாதிப்பு
'கொடை' மலைப்பூண்டு மகசூலில் கூடுதல் மழையால் பாதிப்பு
ADDED : செப் 27, 2024 02:41 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் எதிர்பாராத கூடுதல் மழையால் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான பூண்டி, கிளாவரை, கவுஞ்சி , மன்னவனுார், பூம்பாறை, வில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்டது.
ஆகஸ்டில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் பூண்டு விதை வைக்கும் தருணத்தில் பாதிப்பு ஏற்படுத்தி பூண்டுகளில் வெடிப்பு ஏற்பட்டது. சில வாரங்களாக மலைப்பூண்டு அறுவடை செய்யப்படும் நிலையில் மகசூலில் ஏற்பட்ட பாதிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் வரத்துக்குறைவால் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்தது. 70 சதவீத மகசூல் இழப்பால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். மேலும் எதிர்வரும் பருவத்திற்கு விதைப்பூண்டுகளை தயார் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இழப்பீடு வேண்டும்
பூண்டி விவசாயி கணேசன் கூறுகையில்'' மே மாதத்தில் பூண்டு நடவு செய்வது வழக்கம். ஆகஸ்டில் கனமழையாக கொட்டியதால் பூண்டு மகசூல் பாதித்தது. தற்போது அறுவடை செய்யும் நிலையில் மகசூல் இழப்பை சந்தித்துள்ளோம். விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்திய போதும் விலை தங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. பறிக்கப்படும் பூண்டுகள் வடுகபட்டி சந்தையில் முதல் ரகம் கிலோ ரூ.700 முதல் 800 , 2வது ரகம் ரூ.500 முதல் 600 , 3வது ரகம் ரூ.300 முதல் 400 க்கு விற்கிறது. விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றார்.
விழிப்புணர்வு முகாம்
தோட்டக்கலை துணை இயக்குனர் நடராஜன் கூறுகையில் ''கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடுதல் மழையால் பூண்டு விளைச்சல் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவுறுத்தல் செய்து எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க தொழில்நுட்ப ஆலோசனை, கையாளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டுள்ள பூண்டு தோட்ட பகுதிகளை பார்வையிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும் ''என்றார்.

