/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஐ.டி.ஐ., முதல் ஐ.ஐ.டி., படித்தவர்கள் வரை ராணுவ விஞ்ஞானி ஆகலாம் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு
/
ஐ.டி.ஐ., முதல் ஐ.ஐ.டி., படித்தவர்கள் வரை ராணுவ விஞ்ஞானி ஆகலாம் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு
ஐ.டி.ஐ., முதல் ஐ.ஐ.டி., படித்தவர்கள் வரை ராணுவ விஞ்ஞானி ஆகலாம் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு
ஐ.டி.ஐ., முதல் ஐ.ஐ.டி., படித்தவர்கள் வரை ராணுவ விஞ்ஞானி ஆகலாம் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு
ADDED : மார் 31, 2024 06:41 AM

திண்டுக்கல் : ''ஐ.டி.ஐ., முதல் ஐ.ஐ.டி., படித்தவர்களும் புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் இருப்பின் எளிதில் ராணுவ அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக பணியாற்றலாம்,'' என, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்த ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கிய வழிகாட்டி நிகழ்ச்சியில் 'விஞ்ஞானியாவது எப்படி' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
பிளஸ் 2வுக்கு பின் உங்கள் இதயத்திற்கு எது பிடித்தமான படிப்பாக உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். பி.இ., படித்த எனக்கு மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' படித்த பின் தான் ராணுவத்தில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது. அறிவியலை மதிப்பெண்ணுக்கானதாக மாற்றிவிடக் கூடாது. புதுமையான சிந்தனை, ஆராய்ச்சியில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் விஞ்ஞானியாக எளிதில் ஆகலாம். புதிதாக சிந்திப்பவர்கள் மட்டுமே எதிர்காலத்தை ஆளப்போகின்றனர்.
அடிப்படையில் கோர் இன்ஜி., படிப்புகளை படித்து, பட்டமேற்படிப்பில் சிறப்பு பிரிவு படிக்கலாம். ராணுவத்தில் அணுசக்தி, வின்வெளி உட்பட பல பிரிவுகள் இருந்தாலும் பாதுகாப்புத்துறையில் மட்டும் போர்க்கப்பல் தயாரிப்பு, ராக்கெட், ஏர்கிராப்ட், மின்னணு தவகல் தொடர்பு, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ., உயிரியியல் ஆராய்ச்சி தொழில்நுட்பம் உள்ளிட்ட 7 ஆராய்ச்சி பிரிவுகள் உள்ளன.
புனேயில் ராணுவ பல்கலையே உள்ளது. ராணுவ ஆராய்ச்சிகள் மூலம் தான் பல பாதுகாப்புக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. பறவைகள் மோதி விமானங்கள் பாதிப்பை தடுக்க 'கோழி துப்பாக்கி' கண்டுபிடிப்பு, மெட்ரோ ரயில் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு, மண் உண்ணும் பறவை சோதனை, ஒன்றரை மணிநேரத்தில் தயாரிக்கப்படும் உடனடி மிலிட்டரி பாலங்கள், பேரழிவின்போது பூமிக்குள் 10 அடிக்கும் கீழே புதைந்த உயிருடன் கிடப்பவர்களை கண்டறியும் தொழில் நுட்பம், பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டறிந்து பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் என பல கண்டுபிடிப்புகளை குறிப்பிடலாம். இதுபோன்ற உன்னத பணியில் ஈடுபடும் அதிகாரி ஆக, பி.இ., படித்தவுடன் நுழைவு தேர்வு (விஞ்ஞானி நுழைவுத்தேர்வு) மூலம் சேரலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் பொறியியல் படித்து 80 சதவீதம் மேல் மதிப்பெண்கள் பெற்றால் நுழைவு தேர்வுத் தேவையில்லை. ராணுவ படிப்புகளில் படிக்கும் போதே கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
இஸ்ரோ, அணுசக்தி மையங்கள், அறிவியல் தொழில்நுட்ப துறைகள், மருத்துவ ஆராய்ச்சி அல்லது வேளாண்மை ஆராய்ச்சி துறைகளில் விஞ்ஞானிகளாகலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். உழைக்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும் தயாராக உள்ள யாரும் விஞ்ஞானியாகலாம்.
வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மரைன் கேட்டரிங்
'மரைன் கேட்டரிங்' படிப்பு குறித்து சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது: மரைன் கேட்டரிங் மூன்று ஆண்டுகள் படிப்பு. பிளஸ் 2வில் எந்த பிரிவு படித்தாலும் இப்படிப்பில்சேரலாம். அதிகம் வேலைவாய்ப்புள்ள படிப்பு இது. கப்பலில் பணியாற்ற வேண்டும் என்பதால் இதற்குமருத்துவ தகுதிச் சான்று அவசியம். 80 சதவீதம் செய்முறை பயிற்சியாக தான் இருக்கும். சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெற்று நல்ல சம்பளத்தில் வேலையில் சேரலாம்.
ஆங்கில அறிவு இருந்தால் மருத்துவத்திற்கு இணையான சம்பளம் பெறலாம். பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். இப்படிப்பை தேர்வு செய்வதற்கு முன் தரமான கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிற நிறுவனங்களுடன் வேலைவாய்ப்புகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெளிவாக பார்வையிட வேண்டும். மரைன் கேட்டரிங் படிக்க விரும்பினால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ரயில்வே, பேங்கிங், தகவல் தொழில்நுட்பத் துறை, சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
விரும்பிய படிப்பை தேர்வு செய்தால் வெற்றி உறுதி
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் பேசியதாவது: பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பதில் எல்லோருக்கும் தடுமாற்றம் வருவது வழக்கம். நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என எந்த படிப்பபையும் தேர்வு செய்துவிடாதீர்கள்.
மாணவர்களே நீங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்யுங்கள். கலை அறிவியல் படிப்புகளில் கணினி அறிவியல், வணிகவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். தற்போது ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளன.
பல பிரிவுகளில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் வந்து விட்டன. அவற்றுடன் ஏ.ஐ., தொழில்நுட்பம் சார் கோர்ஸ்களை கூடுதலாக படித்துக்கொண்டு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பி.காம்., படித்தால் மேற்படிப்பு அவசியம் படிக்க வேண்டும். படிக்கும் போது பாடத்திட்டத்தை தாண்டி படிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம்.
பல்வேறு அரசு படிப்புகளுக்கு வணிகவியல் படிப்பை படிக்கின்றனர். இதை தாண்டி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் படிப்பவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான டிமான்ட் ஏற்படவுள்ளது. கல்லுாரி படிப்பு தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஸ்மார்ட் சிந்தனைகள் அவசியம். இன்றைய உலகில் சாதித்துக்கொண்டிருக்கும் 85 சதவீதம் பேர் சுயமாக யோசித்து முன்னேறி வந்தவர்கள் தான். சுய மேம்பாட்டிற்கான புத்தகங்களை படியுங்கள்.
வணிகவியல் படிக்கும் போதே மூன்று மாதம் இ.ஏ., (என்ட்ரோல்டு ஏஜன்ட்) சான்றிதழ் படிப்பை படிக்கலாம். வாய்ப்பின் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் படித்தால் வெற்றி உறுதி.

