/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பில் வத்தல்மலை சாலை பணி: சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
கிடப்பில் வத்தல்மலை சாலை பணி: சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
கிடப்பில் வத்தல்மலை சாலை பணி: சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
கிடப்பில் வத்தல்மலை சாலை பணி: சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : டிச 21, 2025 03:22 AM

தர்மபுரி: வத்தல்மலையில், 'ஹோட்டல் தமிழ்நாடு' கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு செல்ல தார்ச்சாலை வசதி இல்லாததால், இரண்டு முறை டெண்டர் விட்டும், ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், ஹோட்டல் திறக்கப்படவில்லை. இதனால் பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட மக்களின், மினி ஊட்டி என்று அழைக்கப்படும் வத்தல்மலை தர்மபுரியில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய சாலையில் பயணித்து அங்கு செல்ல வேண்டும்.
தமிழக அரசு வத்தல்மலையை, 2011ல் சுற்றுலா தலமாக அறிவித்தது. 2013ல் சாலை உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
2 முறை டெண்டர் இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில் சாகச சுற்றுலா தலமாக வத்தல்மலையை மாற்ற, ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடங்கி, கடந்தாண்டு முடிவடைந்தது.
மலை பாங்கான இடத்திற்கு வரும் சுற்றுலா பயணியரை தங்க வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், ஹோட்டல் தமிழ்நாடு திறக்கப்படாமல் உள்ளது.
ஹோட்டலில் சாப்பாடு பரிமாறும் அறை, கழிப்பறை, வியூ -பாயின்ட் போன்றவற்றை கொண்ட இரண்டு அடுக்கு கட்டடம் தயாராக உள்ளது. இந்த ஹோட்டலை தனியார் பராமரிக்க ஏதுவாக, நடப்பு ஆண்டில் இரண்டு முறை டெண்டர் விடப்பட்டது.
அரசிடம் அனுமதி இங்கு குடிநீர் வசதி இன்றியும், ஹோட்டலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக, ஜல்லி பெயர்ந்து, மிகவும் மோசமாக உள்ளதாலும், சுற்றுலா பயணியர் வர மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டதால், டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.
மேலும் சாலை வசதி ஏற்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தவில்லை.
தர்மபுரி உதவி சுற்றுலா அலுவலர் லாவிஷா கூறு கையில், ''வத்தல்மலையில் சுற்றுலா துறை சார்பில், மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விட்டோம். ஹோட்டலுக்கு ஏற்கனவே இருமுறை டெண்டர் விடப்பட்ட நிலையில், 2026 ஜனவரியில் மீண்டும் டெண்டர் விடப்படவுள்ளது.
''சாலை வசதியை பொறுத்தவரை, நாயக்கனுார் பிரிவு சாலையில் இருந்து ஹோட்டலுக்கு வரும், 600 மீட்டர் நீளமுள்ள ஜல்லி சாலையை தார்ச்சாலையாக அமைக்க, 39 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
''அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

