/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி தேரோட்டம்
/
சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி தேரோட்டம்
ADDED : ஏப் 19, 2024 06:54 AM
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டையில், சென்னகேசவ பெருமாள் கோவில், ராம நவமி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், ராம நவமி திருவிழா கடந்த, 8- அன்று தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அதன்படி சத்திய நாராயணன், மச்சம், கஜேந்திர மோட்சம், ஸ்ரீசேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம், பிருந்தாவனம், பார்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நடந்தன. சுவாமிக்கு நவமி அபிஷேகமும், ராமர் அவதார அலங்கார சேவையும் நடந்தது. தொடர்ந்து, சீர்வரிசை அழைப்பும், பின்னர் கோவில் வளாகத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு, சீதாராம திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, சென்னகேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கபட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். பின்னர், பெண்கள் மட்டும் வடம் பிடித்து, நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று பல்லக்கு உற்சவமும், நாளை சயன உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர்கள், ராம நவமி விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்துள்ளனர்.

