ADDED : ஏப் 23, 2024 10:38 PM
தொப்பூர்:தொப்பூரில், ஒரு நகைக்கடை உட்பட, 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில், நேற்று முன்தினம் இரவு, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ மொபைல்ஸ், மக்கள் கணிணி மையம், அரிசி மற்றும் துணிக்கடை உட்பட, அடுத்தடுத்த, 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. துணிக்கடையில் புடவைகள், ஆட்டேமொபைல்ஸ் கடையில் ஆயில், கணிணி மையத்தில் கேமரா உள்ளிட்டவற்றை திருடிய கும்பல், மற்ற கடையில் பணம் இல்லாததால் பூட்டை உடைத்து விட்டு, அப்படியே விட்டுச் சென்றனர்.
அதேபோல், தொப்பூரில் இருந்து, பொம்மிடி செல்லும் சாலையிலுள்ள, சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த தமிழ்தென்றல், 50, என்பவர் நடத்தி வந்த, 'சேலம் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடையின் பூட்டை உடைத்து, 15 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடி சென்றுள்ளனர்.
தொப்பூர் போலீசார், தடவியல் நிபுணர்களை வரவழைத்து, திருட்டு போன கடைகளில் கைரேகைகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். ஒரே இரவில், 5 கடைகளில் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

