/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலையில் கடும் வறட்சி கருகும் காபி, மிளகு செடிகள்
/
வத்தல்மலையில் கடும் வறட்சி கருகும் காபி, மிளகு செடிகள்
வத்தல்மலையில் கடும் வறட்சி கருகும் காபி, மிளகு செடிகள்
வத்தல்மலையில் கடும் வறட்சி கருகும் காபி, மிளகு செடிகள்
ADDED : ஏப் 26, 2024 01:52 AM

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட மக்களின், 'மினி ஊட்டி' என்று அழைக்கப்படும், தர்மபுரி ஒன்றியத்திலுள்ள வத்தல்மலை, தர்மபுரியிலிருந்து, 25 கி.மீ., தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து, 3,000 அடி உயரத்திலும் உள்ளது. வத்தல் மலையில் ஊட்டி, கொடைக்கானல் போல எப்பொழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும்.
வத்தமலையிலுள்ள, 9 குக்கிராமங்களில், 2,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாகுபடி நடக்கும் காபி பயிரில், ஊடுபயிராக மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா ஆகியவற்றையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
மார்ச், ஏப்., மே மாதங்களில் காபி செடிகளில் பூ பிடித்து, நவ., முதல் பிப்., வரை காபி அறுவடை நடக்கும். ஏற்காட்டிலுள்ள அரசு காபி வாரிய அலுவலகத்தால், காபி கொள்முதல் செய்யப்படுகிறது.
வத்தல்மலையில் நிலவி வந்த குளிர்ந்த சீதோஷ்ண நிலை தற்போது முற்றிலும் மாறி, அனல் காற்று வீசி வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வெப்பத்தால், காபி, மிளகு உள்ளிட்டவை கருகி வருகின்றன.
தர்மபுரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அபிலா கூறியதாவது:
வத்தல்மலையில் அதிக விளைச்சல் கிடைக்கும், காபி, மிளகுடன் சிறுதானிய வகைகளையும் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்தாண்டு பருவமழை போதுமான அளவிற்கு பெய்யாததால், ஈரப்பதம் முற்றிலும் குறைந்து, காபி, மிளகு சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.
தமிழக அரசு, தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து, நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

