ADDED : ஏப் 09, 2025 01:27 AM
ராம நவமி திருவிழா தேரோட்டம்
தர்மபுரி:தர்மபுரி, டவுன் குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்திலுள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், ராம நவமி திருவிழா கடந்த, 29- அன்று தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சத்திய நாராயணன், மச்ச அவதாரம், கஜேந்திர மோட்சம், ஸ்ரீ சேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம், பிருந்தாவனம், பார்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நடந்தன.
தொடர்ந்து, சுவாமிக்கு நவமி அபிஷேகம், ஸ்ரீ ராமர் அவதார அலங்கார சேவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு வரிசை அழைப்பும், பின்னர் கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில், திரளான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை சென்னகேசவ பெருமாள் தேரோட்டத்தில், பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தங்க குதிரைகளுடன் அலங்கார தேரில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனையை தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.
இன்று (ஏப்.9) பல்லக்கு உற்சவம், நாளை சயன உற்சவம்
நடக்கிறது.

