/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 3ம் தேதி தண்ணீர் திறப்பு
/
டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 3ம் தேதி தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 3ம் தேதி தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 3ம் தேதி தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 31, 2025 07:56 AM
கடலுார் : டெல்டா பாசனத்திற்கு, அணைக்கரை கீழணையில் இருந்து வரும் 3ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கரை கீழணையில் இருந்து கடலுார், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து ,839 ஏக்கர் நிலம் டெல்டா பாசன வசதி பெறுகிறது.இந்த ஆண்டு மேட்டூர் அணை 2 முறை நிரம்பிய நிலையில் டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து கடந்த ஜூன் 15ம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்கு முறைப்பாடி தண்ணீர் திறக்கவில்லை.
ஆனால், கடந்த 2 மாதங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கீழணை நிரம்பி, 3 முறை கீழ் கொள்ளிடத்தில் உபரி நீராக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.
கடலுார் மாவட்ட டெல்டா பகுதி பாசனத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் யாரும் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கவில்லை. அதனால் கீழணையில் இருந்து பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாமல், உபரி நீராக வடவாறு, வடக்கு ராஜன்வாய்க்கால் போன்ற பாசன வாய்க்கால்களில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வரும் 3ம் தேதி தண்ணீர் திறந்து விட இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட அமைச்சர் கோவி செழியன் முன்னிலை வகிக்கிறார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.