/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும்... எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தல்
/
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும்... எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தல்
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும்... எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தல்
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும்... எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2025 05:36 AM

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, நிலம் கையகப்படுத்தக்கூடாது என கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலுார் சிப்காட் பகுதியை அடுத்து தியாகவல்லி, குடிகாடு மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள நொச்சிக்காடு, திருச்சோபுரம், ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை, நடுத்திட்டு, அம்பேத்கர் நகர், வள்ளலார் நகர், நந்தன் நகர் உள்ளிட்ட, 18 கிராம எல்லைக்கு உட்பட்ட 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 360 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
நிலங்களை கையகப்படுத்துவதற்காக சிறப்பு மாவட்ட அலுவலர் தலைமையிலான நில எடுப்பு குழுவும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த, 2007ம் ஆண்டில் இப்பகுதியில் கடலுார் பவர் கார்ப்பரேஷன் என்கிற தனியார் அனல் மின் நிலையத்திற்காக நிலங்கள் கையகப்படுத்த முயன்றனர். இந்நிலையில் அந்தாண்டு செப்., 9ம் தேதி மற்றும் நவ., 28ம் தேதி, கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
அந்த கூட்டங்களில் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, பல்வேறு தொடர் போராட்டங்களையும் நடத்தினர்.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே, கடலுாரில் உள்ள சிப்காட் தொழிற்சாலை, குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு நடுவில் இருப்பதால் சுற்றியுள்ள 20 கி.மீ., பரப்பளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, சிறப்பாக இயங்கி வந்த, 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் புதிய பொருளாதார கொள்கையினால் மூடப்பட்டுவிட்டன.
அதன் பின்னர் வந்த சில தொழிற்சாலைகள், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். தேசிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இரவு நேரங்களில் நச்சு வாயுக்களை திறந்து விடுவது, ஆழ்குழாய் கிணற்றில் நச்சுப்பொருட் கூழை வெளியேற்றுவது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் நிலத்தடிநீர், விவசாயம், மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ல் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் நடத்திய 'நீரி' ஆய்வு முடிவில், இப்பகுதியில் வசிக்கக் கூடிய பெண்களுக்கு, 200 மடங்கு புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான், பொது மக்கள், 'வேலைவாய்ப்பும் வேண்டாம்; சிப்காட்டும் வேண்டாம்' என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்விளைவாக சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சிப்காட் திட்ட அலுவலரிடம் கடந்த 11ம் தேதி மனு கொடுத்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள் திரளாக வந்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தக்கூடாது என மனு கொடுத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட கூடிய கிராமங்களில் எல்லாம் கிராம மக்கள் தங்கள் கிராமங்களிலேயே கூட்டம் நடத்தி சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

