ADDED : பிப் 05, 2024 03:56 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், அனைத்து கட்சி பேனர்களையும் போலீசார் அகற்றினர்.
நெல்லிக்குப்பத்தில், போலீசார் கெடுபிடியால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன் நடந்த இரண்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில், ஏராளமான டிஜிட்டல் பேனர்களை நகர வீதிகளில் வைத்தனர். போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், நெல்லிக்குப்பத்தில் மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் தலைதுாக்கியது. பல்வேறு கட்சியினரும் பெரிய அளவில் பேனர்களை வைத்தனர்.
இதனால் பாதிப்பு ஏற்படுவதாக, வர்த்தக சங்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
அதையடுத்து, இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் போலீசார் நகர வீதிகளில் வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி பேனர்களையும் அகற்றினர். இதேபோல் போலீசார் தொடர்ந்து கண்காணித்து போர்டுகள் வைப்பதை தடுக்க வேண்டுமென வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.

