/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காணாமல் போன சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு
/
காணாமல் போன சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு
ADDED : மார் 19, 2024 04:55 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே காணாமல் போன சிறுவன், ஏரியில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மனைவி பொற்கலை,33; இவர்களுக்கு சசிகலா,13; என்ற மகளும், கிஷோர்,9; என்ற மகனும் உள்ளனர். கிஷோர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிஷோர் திடீரென மாயமானார். நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீடு திரும்புவான் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.
ஆனால் இரவு 8:00 மணியாகியும் வீடு திரும்பாததால் யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பண்ருட்டி போலீசில், சிறுவனின் தந்தை சாமிவேல் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
நேற்று காலை மோப்ப நாய் கூப்பர் மற்றும் வெற்றி அழைக்கப்பட்டது. இரு நாய்களும், கிஷோர் வீட்டில் இருந்து கோழிப்பண்ணை, சுடுகாடு வழியாக ஓடி அதே ஊரில் உள்ள ஏரி அருகே நின்றன. சந்தேகமடைந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி தேடினர்.
ஏரியில் மூழ்கி கிடந்த சிறுவன் கிஷோர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், நேற்று மாலை சிறுவனின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இந்நிலையில், சிறுவனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணிக்கு, கடலுார்-பண்ருட்டி சாலையில் முத்துகிருஷ்ணாபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை ஏற்று மாலை 6:45 மணிக்கு மறியீைல கைவிட்டு கலைந்து சென்றனர்.

