/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.130 கோடியில் நான்கு வழிச்சாலை பணி... தீவிரம்; விருத்தாசலத்தில் விபத்துகள் குறையும்
/
ரூ.130 கோடியில் நான்கு வழிச்சாலை பணி... தீவிரம்; விருத்தாசலத்தில் விபத்துகள் குறையும்
ரூ.130 கோடியில் நான்கு வழிச்சாலை பணி... தீவிரம்; விருத்தாசலத்தில் விபத்துகள் குறையும்
ரூ.130 கோடியில் நான்கு வழிச்சாலை பணி... தீவிரம்; விருத்தாசலத்தில் விபத்துகள் குறையும்
ADDED : ஏப் 23, 2024 05:29 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில்130 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் - திருச்சி, சேலம் - சிதம்பரம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், சிமென்ட், சர்க்கரை ஆலைகளுக்கு மூலப் பொருட்கள் மற்றும் உற் பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன. புதுச்சேரி, சிதம்பரம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பஸ் உள்ளிட்ட நெடுந்துார வாகனங்களும் செல்கின்றன.
இதனால், விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடலுார் - சேலம் மார்க்கமாக கடந்த 2011ல் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை 9 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலை போடப்பட்டது.
தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கடலுார் மார்க்கத்தில், குப்பநத்தம் கிராம சாலையில் இருந்து உளுந்துார்பேட்டை மார்க்கத்தில், ஜங்ஷன் சாலையுடன் இணைத்து புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
அதன்பின், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து இரண்டு புறவழிச்சாலைகளும் பிரிகின்றன.
அங்கு விபத்தை தவிர்க்கும் வகையில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., முகப்பில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரை 37 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மே மாதம் திறக்கப்பட உள்ளது.
இந்த புதிய மேம்பாலத்தில் இருந்து சித்தலுார் ரவுண்டானா வரை 4.3 கி.மீ., தொலைவிற்கு, 46 கோடி ரூபாயில் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதில், ஏழு புதிய கல்வெர்ட்டுகள், ஆறு கல்வெர்ட்டுகள் அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக சாலையின் இருபுறம் சிமென்ட் சிலாப்புடன் கூடிய வடிகால் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சாலையின் குறுக்கே செல்லும் மணிமுக்தாற்றில் பழைய பாலத்துக்கு அருகே புதிதாக ஒரு பாலம் கட்டும் பணியும் துவங்க உள்ளது. சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை மீதமுள்ள சாலைக்கு அடுத்த கட்டமாக நிதி பெறப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.
அதுபோல், சித்தலுார் ரவுண்டானா முதல் கருவேப்பிலங்குறிச்சி மார்க்கமாக செல்லும் இருவழிச்சாலையில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல், கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பு முதல் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், ஸ்ரீமுஷ்ணம் பிரிவு சாலை வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு 76 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகி றது. அதில், கருவேப்பிலங் குறிச்சி - டி.வி.புத்துார் இடையே செல்லும் வெள்ளாற்றில் புதிதாக ஒரு பாலம் கட்டும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக தொய்வடைந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியதால், விருத்தாசலம் நகரை சுற்றி நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யும் பணிகள் 130 கோடி ரூபாயில் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் விருத்தாசலம் நகரில் எவ்வித போக்குவரத்து இடையூறும் இல்லாமல், குறித்த நேரத்தில் விரைவாக சென்று வர முடியும் என்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

