/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
/
மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
ADDED : டிச 22, 2025 05:48 AM

வேப்பூர்: மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.10.61 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கியது.
வேப்பூர் அடுத்த மேமாத்துார் கிராமத்தையொட்டி, மணிமுக்தாறு செல்வதால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தனி தீவாகிறது.
அப்போது, அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால், மேமாத்துாரில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கடந்த சட்டசபை கூட்டத்தில், மேமாத்துாரில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.10.61 கோடியில் 195 மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
இதன் கட்டுமானப் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பூமி பூஜையுடன் மேம்பாலம் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார். அப்போது, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வரதராஜப்பெருமாள், குமுதா, நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், தி.மு.க., நிர்வாகிகள் ஞானவேல், அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

