/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெ.பொன்னேரி ரயில்வே பாலம் முகப்பில் தொடரும் விபத்துக்கள்! பொது மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
/
பெ.பொன்னேரி ரயில்வே பாலம் முகப்பில் தொடரும் விபத்துக்கள்! பொது மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
பெ.பொன்னேரி ரயில்வே பாலம் முகப்பில் தொடரும் விபத்துக்கள்! பொது மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
பெ.பொன்னேரி ரயில்வே பாலம் முகப்பில் தொடரும் விபத்துக்கள்! பொது மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
ADDED : மார் 04, 2024 12:26 AM

பெண்ணாடம் ; பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால முகப்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வாகன விபத்துகளை தடுக்கக்கோரி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பெ.பொன்னேரியில் உள்ள ரயில்வே கேட் (எண் - 181) ரயில்கள் வரும் போது மூடுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதித்தது. இதனால் கடந்த 2010ல் ரூ. 23 கோடி மதிப்பில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 2016ல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் அரியலுார் மாவட்டம், தளவாய் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலைகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மேம்பால முகப்பு பகுதியில் வளைந்து செல்ல இடவசதியின்றி, எதிரே வரும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
விபத்துகளை தடுக்க பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால முகப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும். பாலத்தில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன் மேம்பாலம் முகப்பில் ரவுண்டானா மட்டுமே அமைக்கப்பட்டது. மேம்பாலத்தில் இதுவரை மின்விளக்குகள், நிழற்குடை அமைக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது வந்து ஆய்வு செய்து செல்வது மட்டுமே தொடர்கிறது. மற்ற அடிப்படை பணிகள் துவங்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பாலம் பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவது மட்டுமே தொடர்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெ.பொன்னேரி கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணியளவில் பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, தனிப்பிரிவு ஏட்டு தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் மக்களிடம் சமாதானம் பேசினர்.
அதில், மேம்பாலம், ரவுண்டனாவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று, 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

