ADDED : ஏப் 08, 2024 05:49 AM
நெல்லிக்குப்பம்: தினமலர் செய்தி எதிரொலியால் நெல்லிக்குப்பத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பத்தில் கடந்த வாரம் கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு கேட்டார்.வாழப்பட்டில் இருந்து காமராஜர் நகர் வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு பத்துக்கு மேற்பட்ட இடங்களில் முக்கிய சாலையின் நடுவிலேயே நின்று பிரசாரம் செய்தார்.
இதனால் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தினமலர் நாளிதழில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், இனி பயன்படாத பஸ் நிலையத்தில் கூட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து பாதிக்காது என கூறியிருந்தோம். அதன்படி நேற்று தே.மு.தி.க.வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்யும் கூட்டத்தை பஸ் நிலையத்தில் நடத்த போலீசார் கூறினர். அதன்படி பஸ் நிலையத்தில் பிரேமலதா பேசினார்.
இதனால் அவர் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் போதும்,கூட்டம் முடித்து வெளியே வரும் போதும் மட்டும் சில நிமிடங்களே போக்குவரத்து பாதித்தது.
தேர்தல் வரை பஸ் நிலையத்தில் மட்டும் கூட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி தந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

