/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சின்னம் வரைவதில் தி.மு.க., - அ.தி.மு.க., உடன்பாடு
/
சின்னம் வரைவதில் தி.மு.க., - அ.தி.மு.க., உடன்பாடு
ADDED : ஏப் 02, 2024 04:35 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் தொகுதி கிராமங்களில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் போட்டியை மறந்து, ஒரே இடத்தில் இரு கட்சி வேட்பாளர்களின் சின்னங்களை வரைந்து வருகின்றனர்.
கடலுார் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரசார பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதுபோல், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., சார்பில் நகர, கிராமங்களில் சின்னங்கள் வரையும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் நிர்வாகிகள் தங்களுக்குள் உள்ள போட்டியை மறந்து, ஒரே சுவரில் கை சின்னத்தையும், கொட்டும் முரசு சின்னத்தையும் வரைந்துள்ளனர்.
பஸ் நிறுத்தங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் முன்கூட்டியே பேசிய இரு கட்சிகளின் நிர்வாகிகள், அவர்களின் வீட்டு சுவரில் பாதி பாதியாக பிரித்து வரைந்து வருகின்றனர். இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் கைகோர்த்து செயல்படுவது, பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

