/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பயிற்சியில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு தாய் தற்கொலை முயற்சி
/
விளையாட்டு பயிற்சியில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு தாய் தற்கொலை முயற்சி
விளையாட்டு பயிற்சியில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு தாய் தற்கொலை முயற்சி
விளையாட்டு பயிற்சியில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு தாய் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 30, 2024 04:42 AM

வடலுார்: வடலுாரில் விளையாட்டு பயிற்சியின் போது, ஈட்டி தலையில் பாய்ந்து மாணவர் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், வடலுார், தர்ம சாலையை சேர்ந்தவர் திருமுருகன்,35; நெய்வேலி தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கிஷோர்,15; என்ற மகனும், பரணிக்கா,10; என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் கிஷோர், வடலுார் சந்தைதோப்பு எஸ்.டி.சியோன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பம் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றவர். கடந்த 24ம் தேதி மாலை கிஷோர் படிக்கும் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி, அங்கு நின்றிருந்த கிஷோர் தலையில் குத்தியது. அதில் படுகாயமடைந்த கிஷோர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினர்.
அதனையொட்டி, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். போதிய இட வசதியில்லாத மைதானத்தில் பயிற்சி அளித்ததே இச்சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். .
இந்நிலையில், கிஷோர் மூளைச்சாவு அடைந்ததால் மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, தனது வீட்டில் பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் வடலுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

