/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் நேற்று 104.4 டிகிரி வெயில்... சுட்டெரித்தது; கத்தரி துவங்கும் முன்பே மக்கள் தவிப்பு
/
மாவட்டத்தில் நேற்று 104.4 டிகிரி வெயில்... சுட்டெரித்தது; கத்தரி துவங்கும் முன்பே மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் நேற்று 104.4 டிகிரி வெயில்... சுட்டெரித்தது; கத்தரி துவங்கும் முன்பே மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் நேற்று 104.4 டிகிரி வெயில்... சுட்டெரித்தது; கத்தரி துவங்கும் முன்பே மக்கள் தவிப்பு
ADDED : மே 02, 2024 12:20 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கத்தரி வெயில் துவங்கும் முன்பே நேற்று, அதிகபட்சமாக 104.4 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தமிழகத்திற்கு கோடை காலமாகும். இந்த காலங்களில் வெயில் அதிகரிப்பதால் பள்ளி, கல்லுாரி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.
நிலத்தடி நீரும் இறங்கி வருகிறது. இதனால் ஆற்றுப்படுகையில் மோட்டார் பம்ப் செட் தண்ணீர் இறைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி துவங்கிய பின் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கத்தரி வெயில் துவங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே உள் மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வறுத்தெடுத்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 96 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து 97.4, 98.6 என, நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. நேற்று காலை 11:30 மணி நிலவரப்பட்டி 101.6 டிகிரியானது. இது நன்பகல் நேரத்தில் படிப்படியாக 104. 4 டிகிரியாக அதிகரித்தது.
இதனால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். புழுக்கத்தினால் கடும் அவதிப்பட்டனர். பகல் பொழுதில் வெப்ப காற்று வீசுவதால் இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இரவு நேரங்களில் வெப்பத்தின் காரணமாக துாக்கத்தை தொலைத்தனர். பகல் பொழுதில் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இம்மாதத்தில் திடீரென கோடை மழை பெய்யும். ஆனால் தற்போது மழை பொழிவதற்கான சுவடே இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், 'காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வந்ததால் வழக்கத்தை விட அதிகமான அளவில் புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் யாரும் காரணமின்றி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 வரையில் வெளியே செல்லக் கூடாது. வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடலில் நீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர், அதற்கேற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

